நண்பர் கமலை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல துடித்த ரஜினி... தடா போட்ட டாக்டர்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: தனது திரையுலக நண்பர்களில் முக்கியமானவரான நடிகர் கமலை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினி ஆசைப்பட்டாராம். ஆனால், அவரது ஆசைக்கு டாக்டர்கள் தடா போட்டு விட்டார்களாம்.
சபாஷ் நாயுடு முதல்கட்டப் படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்து விட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல், கடந்த மாதம் தனது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

இதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் கபாலி படவேலைகள் முடிந்து ஓய்விற்காக அமெரிக்கா சென்ற ரஜினி, சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும் அவர் தனது நண்பரான கமலை மருத்துவமனைக்குச் சென்று நேரில் நலம் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் போனில் மட்டுமே நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியானது. ஏன் உள்ளூரில் இருந்து கொண்டே ரஜினி போனில் நலம் விசாரித்தார் என்பதற்குப் பின்னணியில் முக்கிய காரணம் இருப்பதாக அவரது நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
அதாகப்பட்டது மனதிற்கும், உடலுக்கும் ஓய்வு தேடி அமெரிக்கா சென்றதாகவும், தற்போது ஆரோக்கியமான சென்னை திரும்பியிருப்பதாகவும் கபாலி வெற்றிக்கு நன்றி தெரிவித்து தான் வெளியிட்ட கடிதத்தில் ரஜினியே தெரிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது தான் பூரண ஓய்விற்குப் பின் சென்னை திரும்பியுள்ள ரஜினி மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என டாக்டர்கள் எச்சரித்தனராம். இதனாலேயே சென்னை திரும்பியதும் கமலை நேரில் பார்க்க துடித்த ரஜினிக்கு அவர்கள் தடை விதித்தார்களாம்.
ஆனாலும், போனில் விசாரித்த போதும் தன் நண்பரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லையே என்ற வருத்தம் ரஜினிக்கு அதிகமாக உள்ளதாம். இதனால், விரைவில் அவர் வீடு திரும்பியதும் அவரை நேரில் சென்று சந்தித்து ரஜினி ஆறுதல் கூறுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications