For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதா? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

உலகத்தர பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள உலகத்தரப் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் திட்டம் சமூக நீதிக்கு சாவுமணி அடிப்பதாகவே அமையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

'இந்தியாவில் அரசுத் துறையில் 10 நிறுவனங்கள், தனியார் துறையில் 10 நிறுவனங்கள் என மொத்தம் 20 உலகத்தர பல்கலைக்கழகங்களை அமைப்பது பற்றி பொதுமக்களிடம் மத்திய அரசு கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது. உலகத் தர பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டம், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து பறிப்பதாகவே அமைந்திருக்கிறது.

Ramadoss condemned on central Government

உலகத்தரமும், இட ஒதுக்கீடும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ள மத்திய அரசும், அதன் உயரதிகாரிகளும் உலகத்தரம் என்ற மாய பொம்மையைக் காட்டி, உயர்கல்வித்துறை இட ஒதுக்கீடு என்ற புத்தகத்தை பறிக்க முயற்சி செய்கின்றனர் என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ள கருத்துக்கேட்கும் ஆவணத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

நாடு முழுவதும் 10 அரசுத்துறை பல்கலைக்கழகங்களை தேர்வு செய்யும் மத்திய அரசு, அப்பல்கலைக்கழகங்களுக்கு 2016-17 முதல் 2020-21 வரை ஆண்டுக்கு தலா ரூ.100 கோடி வழங்கி அதன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும். இந்த வசதிகளைக் கொண்டு கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்த வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமையாகும். இதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளும், விதித்துள்ள கட்டுப்பாடுகளும் இடஒதுக்கீட்டை பறிக்கும் நோக்கம் கொண்டவையாகும்.

உலகத்தரம் கொண்ட பல்கலைக்கழகமாக ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் போது, அந்நிறுவனம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இடஒதுக்கீட்டை பறிப்பதற்கான முதல்படியாகும்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உலகத்தரப் பல்கலையாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம் இப்போது மாநிலப் பல்கலைக்கழகமாக இருப்பதால், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி 69% இட ஒதுக்கீட்டை கடைபிடித்து வருகிறது. இதுவே உலகத்தர நிறுவனமாக மாறும் போது, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டப்படி 49.5% இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும். இதனால், தமிழகத்தில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பாரதியார் பல்கலையில் 20% இட ஒதுக்கீடு உலகத்தரம் என்ற பெயரில் ஓசையின்றி பறிக்கப்படும்.

தமிழ்நாட்டில் சமூகச் சூழல் மாறுபட்டது என்பதால் பிற்படுத்தப்பட்ட மக்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகத்தினருக்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இஸ்லாமியர்களுக்கு 3.5%, பட்டியலினத்தவரில் அருந்ததியருக்கு 3% என உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

உலகத்தர பல்கலைக்கழகம் நடைமுறைக்கு வரும் போது இந்த இட ஒதுக்கீட்டு முறைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், அருந்ததியர் ஆகியோர் அனுபவித்து வந்த இட ஒதுக்கீடு பறிக்கப்படும். அதுமட்டுமின்றி, பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு இப்போதுள்ள 18 விழுக்காட்டிலிருந்து 15% ஆக குறைக்கப்படும். பழங்குடியினருக்கான ஒதுக்கீடு 7.5% உயர்த்தப்படும் என்றாலும், அதை அனுபவிக்க தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் பழங்குடியினர் இல்லை என்பதால் அந்த இடங்களை மற்ற மாநில மாணவர்கள் பறித்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மையியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்) உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் தமிழக அரசால் நிலம் ஒதுக்கப்பட்டு, அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்து நிதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டவையாகும். ஆனால், இன்றைய நிலையில், இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 2 விழுக்காட்டைத் தாண்டாது. உலகத்தரக் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டால் அதிலும் படிப்படியாக இத்தகைய நிலையே உருவாக்கப்படும்.

இந்த பாதிப்புகள் முதற்கட்டமாக ஏற்படுபவை என்றால், அடுத்தடுத்த கட்டங்களில் உருவாக்கப்படும் பாதிப்புகள் இன்னும் மோசமானவையாக இருக்கும். மத்திய அரசு வகுத்துள்ள புதியக் கல்விக் கொள்கைப்படி உலகத்தரக் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்றும், ஒருகட்டத்திற்கும் மேல் மத்திய அரசின் நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் மாணவர் சேர்க்கை, பணி நியமனம் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதற்கும், கல்விக் கட்டணங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசு மிகக்கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அர்ஜுன் சிங் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதிஉதவியுடன் தமிழ்நாட்டில் கோவை உட்பட நாடு முழுவதும் 14 உலகத்தர பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அத்தகைய பல்கலைக்கழகங்களை அமைத்து, அவற்றில் 50% இடங்களை அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்குவதும், அந்த இடங்களை நிரப்பும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைப்பதும் தான் உண்மையான சமூக நீதியாக இருக்கும். மத்திய அரசு இப்போது அறிவித்துள்ள உலகத்தரப் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் திட்டம் சமூக நீதிக்கு சாவுமணி அடிப்பதாகவே அமையும்.

எனவே, இத்திட்டத்தை கைவிட்டு, இதற்காக செலவிடவிருக்கும் ரூ.5000 கோடியை ஏற்கெனவே இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தவும், இட ஒதுக்கீட்டுடன் கூடிய புதிய உயர்கல்வி நிறுவனங்களை அமைக்கவும் ஒதுக்க வேண்டும்; அதன்மூலம் சமூக நீதியை காக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss condemned on central Government over the issue of reservation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X