’இதுல’ தான் தமிழகம் முதலிடம்... ‘இது’ தான் ஜெ. அரசின் சாதனை... இப்படிக்கு ராமதாஸ்!
சென்னை: புதிய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு வசூலித்து ஊழல் செய்வதில் ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதுதான் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் சாதனை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
புதிய தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு வசூலித்து ஊழல் செய்வதில் ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் எத்தகைய ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு இது தான் அசைக்க முடியாத ஆதாரம் ஆகும்.

எதிர்மறை சாதனைகள்...
2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதாக வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி எதிர்மறையான சாதனைகளைத் தான் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த தொழில் அனுமதி ஊழலில் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் 20 பெரிய மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அறிவதற்காக டெல்லியைச் சேர்ந்த தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில் தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இரண்டாம் இடம்...
இவற்றில் தொழிலாளர் வளம், ஆட்சி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும், அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுவதாலும் இவை சாத்தியம் ஆகியிருக்கின்றன.

ஊழலில் முதலிடம்...
ஆனால், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு முக்கிய அம்சமான ‘நல்ல வணிக தட்பவெப்பநிலை'யில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் நல்ல வணிக தட்பவெப்பநிலை நிலவுகிறதா? என்பது, தொழில் தொடங்க அனுமதி அளிக்க கையூட்டு கோரப்படுகிறதா? அனுமதி தர அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? சுற்றுச்சூழல் அனுமதிக்கு எவ்வளவு காலம் ஆகிறது? என்பன உள்ளிட்ட 22 காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த காரணிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் ஊழலில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

லஞ்சம்...
இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து தொழில்துறையினரும் (100%) தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் பெருமளவில் பணத்தை கையூட்டாக தர வேண்டும்; இல்லாவிட்டால் தொழில் தொடங்க அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளனர். இந்த புள்ளிவிவரம் தேர்தல் கருத்துக் கணிப்புகளைப் போல கற்பனையாக எழுதப்பட்டதல்ல. மாறாக தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் நேரடியாக பெறப்பட்டதாகும். தமிழகத்தில் இப்போது தொழில் நடத்துபவர்கள் அனைவரும் அதற்காக ஆட்சியாளர்களிடம் கையூட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதால் தான் இவ்வாறு பதில் அளித்துள்ளனர்.

ஆதாரங்களுடன் அறிக்கை...
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதில் ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆய்வில் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. மாறாக இது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். இதுபற்றி ஏராளமான ஆதாரங்களுடன் நான் பலமுறை அறிக்கை வெளியிட்டு உள்ளேன். ஏற்கனவே தொழில் தொடங்கிய சிறு தொழிலதிபர் ஒருவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கும் போது,‘‘ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய தொழிற்சாலையை நான் அமைத்தேன். அதில் உற்பத்தித் தொடங்கவிருந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்டத் துறையிலிருந்து அறிவிக்கை வந்தது. அதில் தொழிற்சாலைக்கு இன்னும் சில அனுமதிகளை வாங்க வேண்டும்; அந்த அனுமதிகளை 10 நாட்களில் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் தொழிற்சாலையை பூட்டி சீல் வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் துறையின் அதிகாரியை சந்தித்த போது, அமைச்சரிடம் பேசும்படி கூறினார்.

நிரூபணம்...
அமைச்சரை சந்தித்த போது, அனைத்து அனுமதிகளையும் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பேரம் பேசி அதை 20 லட்சமாக குறைத்தேன். எனது தொழிற்சாலையின் முதலீடே ரூ.1 கோடி தான் எனும் போது அதற்கு அனுமதி வாங்க ரூ.20 லட்சம் கையூட்டு என்பது மிகப் பெரிய தொகை'' என்று கூறியிருந்தார். இப்போது இந்த தகவல் வெளியாகியிருப்பதன் மூலம் எனது குற்றச்சாற்று உண்மை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவலநிலை...
அனுமதி அளிப்பதில் தாமதமும், ஊழலும் தான் புதிய தொழில் முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொழில்வளம் பெருகாததற்கு காரணம் ஊழல் தான் என்பதற்கு இதை விட வலிமையான ஆதாரம் தேவையில்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை நிலவுவதால் தான் தொழில் தொடங்க யாரும் முன்வருவதில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு குவிந்தாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இதுவரை ஒரு புதிய தொழிற்சாலைக்கு கூட அடிக்கல் நாட்டப்படவில்லை. இந்த அவலநிலைக்கு காரணம் ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை.

பாமக ஆட்சியில்...
ஆட்சியாளர்களின் ஊழல் வெறி காரணமாக தொழில்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 70 நாட்களில் பா.ம.க. ஆட்சி அமையும் போது இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அப்போது தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதை தீர்மானிப்பதற்கான 5 அம்சங்களிலும் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும் என்பது உறுதி!'' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications