என்னை நடைபிணம் ஆக்கிவிட்டு என் பெயரில் நடைபயணம் செய்யப் போகிறாராம் அன்புமணி.. தழுதழுத்த ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: "என் கைவிரல் கொண்டே என் கண்ணை குத்திக் கொண்டேன். என்னை நடைபிணமாக்கி விட்டு, நடைபயணம் செய்கிறார்கள். எல்லாமே நாடகம்." என ஆதங்கத்தோடு பேசியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

வரும் ஜூலை 25 ஆம் தேதி ராமதாஸ் பிறந்தநாளன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாமக தலைவர் அன்புமணி திட்டமிட்டுள்ள நிலையில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் ராமதாஸ்.

Ramadoss Hits Out Anbumani Treats Me Like a Walking Corpse for Political Drama

பாமகவில் உச்சகட்ட மோதல்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் அதிகாரம் தொடர்பாக மோதல் நீடித்து வந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இன்று செய்தியாளர் சந்திப்பிலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ராமதாஸ்.

ராமதாஸ் பரபர பேட்டி

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனக்கும் செயல் தலைவருக்கும் நடக்கும் பிரச்சனைகள் முழுவதும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. சிறந்த ஆளுமைகள் உள்ள 2 பேரின் சமரச பேச்சு வார்த்தைகள் டிராவில் முடிந்து விட்டது. 16 பஞ்சாயத்துகள் நடந்தது. நான் தொடங்கிய 34 அமைப்புகள் எனக்கு பஞ்சாயத்து பண்ண வந்தார்கள். இது தான் தலைவிதி என்பதா? என நொந்து கொண்டேன். ராமதாஸ் இங்கேயே இருந்து கட்சியை வளர்ப்பது. அன்புமணி வெளியே சென்று மக்களை பார்ப்பது என்று தான் பஞ்சாயத்து பேச வந்தவர்கள் தீர்ப்பு கூறினார்கள்.

மாநாட்டு மேடையிலேயே தலைவர் பதவியை எழுதி தர நான் தயாராகவே இருந்தேன். அதன் பிறகு என்னுள் இருந்த கோபம் வெளியே வந்து நீயா நானா என பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். கேட்டை சாத்திக் கொண்டு கொள்ளு பேரப் பிள்ளைகளுடன் இருக்கட்டும் என கூறிவிட்டார். அப்படி கேட்டை சாத்தி கொண்டு என்னால் இருக்க முடியாது.

எனக்கு உரிமை இல்லையா?

46 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சியை இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா? இப்படி கேட்கவே அவமானமாக உள்ளது. கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. மாவட்ட செயலாளர்கள் என்னை பார்க்ககூடாது என அவர்களிடம் தெரிவித்து என்னை மானபங்கம் செய்கிறார்.

அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் வந்து இருக்கும். தந்தைக்கு பிறகே தனையன். அன்புமணி குருவுக்கு மிஞ்சிய சீடனாக இருக்கலாம். ஆனால், தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது. இதுவே உலக நீதி, சாஸ்திர சம்பிரதாயம். என்னை குலசாமி என கூறி என் நெஞ்சில் குத்துகிறார்கள். என்னை அகல பாதாளத்தில் தள்ளுகிறார்கள். என் தெய்வம் என கூறிக்கொண்டு, அவமானப் படுத்துகிறார்கள். சிறுமைப்படுத்துகின்றனர், குறிவைத்து தாக்குகின்றனர்.

7 வருடங்களுக்கு முன்பே

7 வருடங்களுக்கு முன் மோடி பதவியேற்புக்கு நான் டெல்லி சென்றேன். நான், அன்புமணி, ஜி.கே.மணி சென்றிருந்தோம். அப்போது அன்புமணி என்னிடம், அப்பா நான் கட்சியை பார்த்துக் கொள்கிறேன் என்றார். அப்படி கூறி விட்டு நான் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என அப்போது கூறினார். 6 வருடங்களுக்கு முன்பே அவருக்கு இது போன்ற எண்ணம் இருந்துள்ளது. அதன்பிறகு அவர் எப்படி தலைவர் ஆனார் என்பது உங்களுக்கே தெரியும்.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் பேசி, போகாதே, போகாதே என்று கூறியுள்ளார். அப்படியும் மீறி 8 பேர் வந்தார்கள். ஒரு பொய்யான தகவலை சொல்லி, என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்போகிறார் என்று சொல்லி போக வேண்டாம் என்று தடுத்து விட்டார். அந்த மாதிரியான நிகழ்வு நடக்காமல் இருந்தால், ஓரிரு ஆண்டுகளில் முடிசூட்டுவிழா நானே முன்னின்று நடத்தியிருப்பேன்.

எல்லாமே நாடகம் - ராமதாஸ்

அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே, என்னை குறி வைத்து தாக்குகின்றனர். இவையெல்லாம் நான் உருவாக்கி சமூக ஊடகப் பிரிவும், சமூக வலைதளங்களின் மூலம் எனக்கு எதிராக செய்கின்றனர். என் கைவிரல் கொண்டே என் கண்ணை குத்திக் கொண்டேன். உயிருள்ள என்னை எல்லா பக்கமும் உதாசீனப்படுத்திவிட்டு, உருவப்படத்தை மட்டும் வைத்து விட்டு, உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி விட்டு, நடைபயணம் செய்கிறார்கள். எல்லாமே நாடகம். அதில், ஒவ்வொருவரும் நடிகர்கள்" என ஆதங்கத்தோடு பேசியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+