டாஸ்மாக் நேரம் குறைப்பு... பாமகவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்கிறார் ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் மது விற்பனை நேரமும், மதுக்கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதோடு, இவ்வாறு 500 கடைகளாக மூடினால் தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் மதுக்கடைகளையும் மூட எப்படியும் 14 ஆண்டுகள் ஆகும். இதனால் உரிய திட்டமிட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் சமூகத்துக்கு பயன் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முக்கியமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படும். 500 சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்பதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார். இதுதொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பா.ம.க. தொடங்கப்பட்ட நாளில் இருந்து 26 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன் வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அந்த வகையில் தமிழகத்தில் மது விற்பனை நேரமும், மதுக்கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருப்பது பா.ம.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.
தமிழகத்தின் மது விற்பனையில் 90 சதவீதம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது. இதைக்கருத்தில் கொண்டு மது விற்பனை நேரத்தை காலையில் 2 மணி நேரம் குறைத்ததற்கு பதிலாக மாலையில் 2 மணி நேரம் குறைத்திருந்தால் அது ஓரளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அதேபோல், விற்பனை நேரம் நாளை(இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, 500 சில்லறை மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்காதது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் மேலாக படிப்படியாக மது விலக்கை ஏற்படுத்துவதற்கான வாக்குறுதி இந்த ஒற்றை நடவடிக்கையுடன் முற்று பெற்றுவிடக் கூடாது.
தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் மதுக்கடைகள் இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 500 மதுக்கடைகளை மூடினால் முழு மதுவிலக்கை ஏற்படுத்த இன்னும் 14 ஆண்டுகள் ஆகும். இது மிக நீண்ட அவகாசமாகும். முழு மதுவிலக்கு என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்ட நிலையில் மாதம்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மதுக்கடைகளை மூடி இந்த ஆண்டு இறுதிக்குள் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.
இது தொடர்பான தெளிவான கொள்கைகளை வகுத்து தமிழகத்தில் முழு மதுவிலக்கு எப்போது ஏற்படுத்தப்படும், எந்தெந்த கால இடைவெளியில் எவ்வளவு கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய மதுவிலக்கு செயல்திட்டத்திற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
மதுக்கடைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்குவதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications