ராமேஸ்வரம் ராமநாதசுவாமி.. அப்துல் கலாம்.. விவேகானந்தர் என் பாக்கியம்.. அமித்ஷா தமிழில் ட்வீட்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்தையும் வழிபட்டார். ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமித்ஷா.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. காசி யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரத்தில் யாத்திரையை நிறைவு செய்வார்கள். ராமாயண புராண காவியத்தோடு தொடர்புடையது ராமநாதசுவாமி கோவில். சீதையை சிறை எடுத்துச்சென்ற ராவணனை வதம் செய்த பாவம் தீர ஸ்ரீராமர் இங்கே சிவ லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்! மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்பாள் ஸ்ரீ பர்வத வர்த்தினி.
இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு ஸ்படிக லிங்க தரிசனம். கருவறையில் உள்ள ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை 5 முதல் 6 மணி முடிய சிறப்பு தரிசனம் நடைபெறும். இது வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பு எனப் போற்றுகின்றனர். இந்த ஸ்படிக லிங்கத்தைத் தரிசனம் செய்து, புண்ணிய தீர்த்தத்தில் வழிபட்டால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம்; பித்ருக்களின் ஆசீர்வாதத்துடன் சந்ததி பலத்துடன் வாழலாம் என்று கூறப்படுகிறது.
ராமேஸ்வரம், ராமநாதர் சிலையை உருவாக்கி சிவலிங்க பூஜை செய்த ராமபிரானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த தோஷம் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறியது. யாரையாவது பற்றிக் கொள்ளலாமா என சென்று கொண்டிருந்த போது சிவ பெருமானின் தன் வடிவங்களில் ஒன்றான பைரவரை அனுப்பி, அந்த பிரம்மஹத்தி தோஷத்தை தன்னுடைய பாதத்தில் அழுத்தி பாதாளத்திற்குத் தள்ளினார் என்பது ஐதீகம். பின்னர் ஆலையத்திலேயே தங்கிய பைரவர், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் பாவத்தை பாதாளத்திற்கு தள்ளி அருள் வழங்கி வருகிறார். அதனால் தான் இவருக்கு பாதாள பைரவர் என பெயர் வந்தது. இவருடைய சன்னதிக்கு அருகில் தான் முக்தி தரக்கூடிய கோடி தீர்த்தம் உள்ளது.
இந்த ஆலயத்திற்கு பல அரசியல் தலைவர்கள் வந்து வழிபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து தீர்த்தமாடி செல்கின்றனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்'யாத்திரையை தொடக்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து நேற்று மாலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் அவர் பேசினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.
இதனையடுத்து இன்று காலை 5:45 முதல் 7 மணி வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் கிழக்கு கோபுர வாயிலில் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி சுவாமிகளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தை பார்வையிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயர், 21 தீர்த்தங்கள் உள்ளிட்ட பிற தரிசனங்களை மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரும் தரிசனம் செய்தனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே தனது ராமேஸ்வரம் பயணம் குறித்தும் ராமநாதசுவாமி கோவில் தரிசனம் பற்றியும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமித்ஷா. ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் என்று பதிவிட்டுள்ளார் அமித்ஷா.

இதனைத் தொடர்ந்து அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்ட அமித்ஷா அதனையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடத்திற்குச் செல்வது ஒவ்வொரு தேசபக்தரின் கனவாகும். மகத்துவம் என்பது ஒருவரின் உடைமையில் இல்லை, தேசத்திற்கு ஆற்றும் பங்களிப்பில் உள்ளது என்ற எண்ணத்தின் சான்றாக வாழ்ந்த மாபெரும் அறிஞர், விஞ்ஞானி, நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு என் வீரவணக்கத்தை செலுத்திய போது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமித்ஷா தனது மற்றொரு ட்வீட்டில், மனிதகுலத்தின் நன்மைக்காக கனவு காணவும், சிறந்து செயல்படவும் இந்தியாவுக்கு கற்றுத் தந்தவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரது வழியில் நடந்தால், அது இன்று நிறைவேறுவதைக் காண முடியும். 'டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மெமரீஸ் நெவர் டை' என்ற புத்தகம் இன்று ராமேஸ்வரத்தில் வெளியிடப்பட்டது, எழுத்தாளர்கள் நம்மை அவரது நினைவுப் பாதையில் அழைத்துச் சென்று புதிய தலைமுறையினருக்கு புதிய உயரங்களை தொட அவர் கண்ட கனவுகளை நம்மிடைய எடுத்துக்காட்டுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு சென்ற அமித்ஷா அதனையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுவாமி விவேகானந்தரின் தெய்வீக ஞானத்தின் அருளால் அருளப்பட்ட புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை பார்வையிட்டேன். இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் அனைவரும் ஆன்மீகம் என்ற ஒரே இழையோடு ஒன்றி பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இந்தியாவை ஒரு புதிய ஆன்மீக மறுமலர்ச்சிக்கு விழித்தெழுப்பிய மகா துறவிக்கு எனது வணக்கத்தை செலுத்தினேன் என்று பதிவிட்டுள்ளார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் மட்டுமல்லாது அங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications