ராமேஸ்வரம் கொடூரம்: மாணவியை கொலை செய்ததற்கான காரணம் இதுதான்.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்திய நிலையில், அப்போது மாணவி விலகி செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்நிலையில், மாணவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், மீனவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்து ஷாலினி (வயது 17) என்ற மகள் இருந்தார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த மீனவர் முனியராஜ் (21) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஷாலினி பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் தினமும் அவரைப் பின்தொடர்ந்து காதல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

அடிக்கடி மாணவியை சந்திப்பதும், காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்தும் இருக்கிறார். காலை மாலை என மாணவியை விடாமல் காதலிக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளார். கடந்த இரு வாரமாக தொடர்ந்து அவர் தொந்தரவு செய்து வந்த நிலையில், இதுகுறித்து தனது பெற்றோரிடம் ஷாலினி கூறியுள்ளார்.
இதையடுத்து, ஷாலினியின் பெற்றோர் முனியராஜின் வீட்டிற்குச் சென்று இதுகுறித்து பேசி சமாதானம் செய்துள்ளனர். ஷாலினி பெற்றோரிடம் கூறியதால் முனியராஜ் கடும் ஆத்திரமைடந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் ஷாலினி வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்த முனியராஜ் தன்னை காதலிக்குமாறும், இல்லை என்றால் கொன்று விடுவேன் என்றும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், பயந்துபோன மாணவி முனியராஜிடம் இருந்து விலக முயற்சி செய்துள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளால் ஷாலினியின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில், நிலைகுலைந்து போன மாணவி ஷாலினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் துறைமுக காவல் துறையினர் முனியராஜை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியராஜ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது: "கடந்ச சில மாதங்களாக மாணவி ஷாலினியை பள்ளிக்குச் செல்லும்போதும், மீண்டும் வீடு திரும்பும்போதும் அவரை பின்தொடர்ந்து காதலிக்குமாறு கூறி வந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்துவிடு நாம் எங்கேயாவது சென்றுவிடலாம் என்று கூறினேன்.
ஷாலினியை நான் ஒருதலையாக தீவிரமாக காதலித்தேன். என்னுடைய நெஞ்சிலும் ஷாலினி என்று பச்சை குத்தியுள்ளேன். ஆனால், நான் படிக்க வேண்டும் என்றும், என்னை பின்தொடர வேண்டாம் என்றும் ஷாலினி கூறினாள். தொடர்ந்து காதல் தொல்லை செய்து வந்தால் பெற்றோர் மூலம் போலீஸில் புகார் அளித்துவிடுவேன் என்று கூறினாள்.
அவர் அவ்வாறு கூறியது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால், மாணவி பள்ளி செல்லும்போது கத்தியால் குத்தி கொலை செய்தேன்" என்று வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
முனியராஜ் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 3 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, முனியராஜ் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications