திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அடைக்கப்பட்ட ராம்குமார்.... சிறையில் "தனிமைக் கொடுமை"!
சென்னை: ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை அறை திருநங்கைகளை அடைக்க ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதுவரை எந்த திருநங்கைகளும் அடைக்கப்படாத நிலையில் அங்கு ராம்குமார் தனிமையிர் அடைக்கப்பட்டு இருந்தாராம். இதுவும் ராம்குமாரை மனஉளைச்சலுக்கு ஆளாகி அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ராம்குமாரை கடைசியாக சந்தித்த வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. பொய்யான வழக்கில் நம்மை இப்படி சிக்க வைத்து விட்டார்கள் என்ற மன வருத்தம் தான். நான் பலமுறை அவரிடம் இந்த கொலைக்கும், உங்களுக்கும் ஏதும் தொடர்பிருந்தா சொல்லுங்க என்று பலமுறை கேட்டிருக்கிறேன். அப்படி ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்துகொள்ள முடியுமா? அது சாத்தியமா? என்பது போன்ற பல கேள்விகள் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
ராம்குமார் தற்கொலை சம்பவத்தில் புழல் சிறையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றி ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ராம்குமாரை அவ்வப்போது சந்தித்து மனரீதியாக கவுன்சிலிங் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மனோதத்துவ நிபுணர்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சுவாதி கொலை வழக்கு
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தான் குற்றவாளி என்பதற்கு போலீசார் தகவல் தொழில்நுட்பரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும் கண்ணால் கண்ட சாட்சியங்களின் அடிப்படையிலும் பலதரப்பட்ட ஆதாரங்களை திரட்டி உள்ளனர். ராம்குமாரின் சட்டையில் சுவாதியின் ரத்தக் கறை எப்படி வந்தது? சுவாதியின் செல்போன் ராம்குமாரின் வீட்டுக்கு எப்படி போனது? கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலைய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ராம்குமார் உருவம் பல கோணங்களில் பதிவானது எப்படி? ஆகிய கேள்விகளை போலீசார் எழுப்பியுள்ளனர்.

ராம்குமார் கொலை
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று சந்தேகத்தை எழுப்பியவர்கள் தான், இப்போது ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். அதேநேரத்தில்
அவ்வளவு கைதிகள் இருந்த நேரத்தில் ராம்குமாரை எப்படி கொலை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர் காவல்துறையினர்.

தனிமைக் கொடுமை
ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பகுதி ‘டிஸ்பென்சரி பிளாக்' என்று அழைக்கப்படும். இது உயர் பாதுகாப்பு பகுதி ஆகும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை அறை திருநங்கைகளை அடைக்க ஒதுக்கப்பட்டது என்றும் இதுவரை எந்த திருநங்கைகளும் அடைக்கப்படாத நிலையில் அங்கு ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தாராம். இதுவும் ராம்குமாரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது என்கின்றனர்.

கவுன்சிலிங் கொடுத்த நிபுணர்
ராம்குமாருக்கு அடிக்கடி கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை அளித்து வந்த மனோதத்துவ நிபுணர், ராம்குமார் பற்றி கூறியுள்ளார். என்னிடம் கூட மனம்விட்டு பேச மாட்டார். நான் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார். அவரை பயமுறுத்தும் விதத்தில் சிலர் பேசி இருக்கலாம். சில கைதிகள் கூட அவரை பயமுறுத்தும் வண்ணம் பேசியதாக தகவல் உண்டு. அதுபோன்ற கைதிகளை ராம்குமாரை சந்திக்க விடாமல் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர்.

தற்கொலை மனநிலை
போலீசார் கைது செய்த போதே, ராம்குமார் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றவர். அதே மனநிலை தான் அவரிடம் தொடர்ந்து காணப்பட்டது. அவர் யாரிடமும் மனம்விட்டு பேசமாட்டார். வாரத்துக்கு ஒரு முறை நான் அவரை சந்தித்து மனதளவில் அவரை தேற்றி இருக்கிறேன்.

தற்கொலைக்கு தூண்டியது யார்
ராம்குமாரின் மரணத்திற்கு கண்டிப்பாக சிலரின் தூண்டுதல் பின்னணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ராம்குமாரை கொல்வதற்கு எந்தவித காரணமும் இல்லை. சிறையில் அதற்கான முகாந்திரமும் இல்லை. மாஜிஸ்திரேட்டு விசாரணையில் கண்டிப்பாக உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அந்த நிபுணர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications