ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்! மகனுக்கு பதிலாக அமைச்சர் காந்தி மீண்டும் களமிறங்குகிறார்
ராணிப்பேட்டை: தமிழகத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது. மகனுக்குத் தான் சீட் வழங்கப்பட்டிருந்தாலும் கூட காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மகன் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத சூழலில், இன்றைய தினம் அமைச்சர் காந்தியே அங்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லை. தேர்தலுக்குக் குறுகிய காலமே உள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல்
இதற்கிடையே இன்றைய தினம் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். இன்றைய தினம் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்றைய தினம் ராணிப்பேட்டையில் மிகப் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. அங்குக் கடைசி நேரத்தில் திமுக வேட்பாளர் மாறியிருக்கிறார். மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாகத் தந்தையே போட்டியிடுகிறார்.
காந்தி
அதாவது தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் ஆர்.காந்தி. 80 வயதான இவருக்கு வயதைக் கருத்தில் கொண்டு திமுக தலைமை சீட் வழங்காமல் இருந்தது. இருப்பினும், அவருக்குப் பதிலாக அவரது வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டு இருந்தது. மகனுக்குத் தான் சீட் வழங்கப்பட்டிருந்தாலும் கூட காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவரது மகன் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்தச் சூழலில் தான் ராணிப்பேட்டையில் திமுக வேட்பாளர் மாற்றப்படுவதாகத் தகவல் வெளியானது. அதாவது மகனுக்குப் பதிலாக அமைச்சர் காந்தியே அங்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கேற்றார் போல வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்சி வழங்கும் 'பி' பார்மிலும் அமைச்சர் காந்தி இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து வினோத் காந்தியும் இதைத் தனது ட்விட்டரில் உறுதி செய்திருந்தார்.
வேட்புமனு தாக்கல்
இந்தச் சூழலில் தான் அவர் இன்றைய தினம் ராணிப்பேட்டை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சென்று அவர் வேட்பு மனுவை சமர்ப்பித்தார். ஆர் காந்தி ராணிப்பேட்டை தொகுதியில் 1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வென்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் ஆர் காந்தி 1.03 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுகவின் சுகுமார் 86 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் காந்தி சுமார் 16,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.











Click it and Unblock the Notifications