மாவோயிஸ்டு தம்பதியின் மகள் ஆமிக்கு ஃபேஸ்புக்கில் பெருகும் ஆதரவு
கோவை: கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு தம்பதியின் மகள் ஆமியை போலீசார் விசாரிக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவருக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் 6 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்டுகளான ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இதில் ரூபேஷ் மாவோயிஸ்டுகளின் தென்னிந்தியா தலைவன் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் 5 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் விசாரணை நடைபெற்று வருகிறது. வருகிற 15ஆம் தேதியுடன் போலீஸ் காவல் முடிகிறது. இந்தநிலையில் ரூபேசும், ஷைனியும் திருப்பூரில் கடந்த இரண்டரை ஆண்டாக தங்கியிருந்த தகவல் போலீசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாவோயிஸ்ட் தம்பதி
திருப்பூரில் ரூபேஷ் தங்கியிருந்த போது அவர்களது மகள்களான ஆமி(வயது 16), தாஜூ(13) ஆகியோர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். வழக்கம் போல் அவர்கள் பெற்றோரை சந்திக்க வந்த போது தான் போலீசார் பின்தொடர்ந்து வந்து கண்காணித்தனர். அப்போது தான் ரூபேஷ் தம்பதி திருப்பூரில் தங்கியிருப்பது உறுதியானது. அவர்களை பின்தொடர்ந்த போதுதான் கருமத்தம்பட்டியில் சிக்கினர்.
மகளிடம் விசாரணை
இந்த நிலையில் ரூபேஷ் தம்பதியின் மூத்த மகள் ஆமியிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது போலீஸ் காவலில் உள்ள ஷைனாக்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்தார். நேற்று மாலை ரூபேஷ் தம்பதியின் வழக்கறிஞர்கள் கேசவன், பாலமுருகன் ஆகியோர் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு சென்று அவர்களை சந்தித்தனர். அப்போது ஷைனா, அவரிடம் ‘எனது மூத்த மகளிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளார்களா? என்று கேட்டார். ஆமி மற்றும் தாஜுவிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்ற தகவல் கிடைத்த பின்னரே தாய் சைனா மனநிம்மதி அடைந்து இருப்பதாக தெரிகிறது.
பெற்றோர்களை பார்க்கவில்லை
இதனிடையே தனது பெற்றோர்களை பார்த்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று ஆமி கூறியுள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் கூறியுள்ள போலீசார், ஆமி தனது பெற்றோரை சந்தித்ததற்கு சாட்சியம் இருக்கிறது என்றார். தேவைப்பட்டால் ஆமியை விசாரிப்பதில் தவறில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஃபேஸ்புக்கில் ஆதரவு
இதற்கு கேரளத்து இளைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆமிக்கு ஆதரவாக, ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். புரட்சிகர காதலர்களின் அன்பின் சின்னம் ஆமி. அவளை சர்வாதிகாரமாக ஒடுக்க நினைத்தால் நாங்கள் பொறுக்கமாட்டோம் என்று பதிவிட்டுள்ளனர். இதற்கு 6 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆமியை பாதுகாப்போம். உரிமையை பாதுகாப்போம்' என்று முகநூலில் பலர் குறிப்பிட்டுள்ளதை பலரும் பகிர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications