For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய யூனுசுக்கு வீரதீர விருது... ஜெ. வழங்கினார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட கே. கே. நகர் இன்ஸ்பெக்டர் எம்.எஸ். பாஸ்கர், தொழிலதிபர் யூனுஸ் உள்ளிட்ட நால்வருக்கு குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் 67வது குடியரசு தினவிழா இன்று நாடுமுழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் காந்தி சிலை முன்பாக இன்று காலையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசைய்யா மூவர்ண கொடியேற்றி வைத்தார்.

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு சென்ற ஆளுநர் ரோசய்யா அங்கு போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து வந்த, ஆளுநரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். பின்னர் ஆளுநர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து கடற்கரை சாலையில் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார். பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை,முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

Republic day: 3 police officials received Gandhi Adigal Police Medal

வீர தீரச் செயல் அண்ணா பதக்கம்

வீர தீர செயல் புரிந்தமைக்கான அண்ணா விருதை எம்.எஸ்.பாஸ்கர், சீனிவாசன், ரிஷி, முகமது யூனுஸ் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் நீலாங்கரை, பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, பெத்தேல் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கிய போது அங்குள்ள மக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மீனவர்கள் உதவியுடன் 1,500 பேர்களை காப்பாற்றினார் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எஸ். பாஸ்கர்.

சீனிவாசன், நங்கநல்லூர்.

மெரீனா கடற்கரையில் குளித்துக் கொண்டு இருந்த குணசேகரன் என்ற வாலிபரை கடல் அலை இழுத்துச் சென்ற போது அவரது தாயார் பிரபா காப்பாற்ற முயன்ற போது அவரும் கடல் அலையில் சிக்கினார். அப்போது மெரீனாவை சுற்றிப்பார்க்க வந்த சீனிவாசன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இருவரையும் காப்பாற்றினார்.

செல்வன் ரிஷி, சீர்காழி திருமுல்லைவாசல்.

நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் கடலில் குளித்துக் கொண்டு இருந்த சகாபுதீன், சமீர் பாரி ஆகிய இருவரை கடல் அலை இழுத்துச் சென்றது. அவர்களை கடலில் இறங்கி செல்வன் ரிஷி காப்பாற்றினார்.

வெள்ளத்தில் மீட்ட யூனுஸ்

17.11.2015 அன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது முகமது யூனுஸ் முயற்சியால் 1,500 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 300 வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். 2.12.2015 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 600 பேரை காப்பாற்றினார். 1.12.2015 அன்று ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சித்ராவை மீட்டு பெருங்களத்தூர் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் சித்ரா-கணவர் மோகன் ஆகியோர் அந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டனர்.

அண்ணா பதக்கம், காசோலை

முகமது யூனுசின் தன்னலமற்ற தீர செயல்களை பாராட்டி அரசு அவருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்பட்டது. பதக்கம் பெற்ற 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மத நல்லிணக்க பதக்கம்

மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்ட தஞ்சை மாவட்டம் எம்.பி. அபுபக்கருக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு பதக்கமும் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, சான்றிதழ்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

காந்தியடிகள் காவலர் விருது

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக தஞ்சை மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நாகை மாவட்டம் புதுப்பட்டினம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, தர்மபுரி மாவட்டம் ஏர்யூர் போலீஸ் ஏட்டு ராஜூ ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம் வழங்கப்பட்டது.

பெண் விவசாயிக்கு விருது

திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைப்பிடித்து அதிக உற்பத்தியை ஈட்டிய மதுரை திருப்பாலை கிராமத்தைச் சேர்ந்த பெண் பிரசன்னாவுக்கு பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இவர் அரை ஏக்கருக்கு 3,223 கிலோ தானிய மகசூல் மற்றும் ஹெக்டேருக்கு 16,115 கிலோ தானிய மகசூல் செய்துள்ளார். இது மாநிலத்திலேயே அதிக விளைச்சல் ஆகும். இதனைத் தொடர்ந்து விருது பெற்ற அனைவரும் முதல்வருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

English summary
3 police officials have received the prestigious Gandhi Adigal Police Medal on Republic Day 2016 for their outstanding work in curbing illicit liquor in the Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X