ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மநகூ சார்பில் பொதுவேட்பாளர்?
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 15-ந் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இத்தொகுதியில் போட்டியிட்டு தாமே ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என நிரூபிக்கப் போவதாக எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா அறிவித்துள்ளார். தமக்கு ஓபிஎஸ் அதிமுக ஆதரவு தரும் என்பது அவரது நம்பிக்கை.

சசிகலா அதிமுக
அதேநேரத்தில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சசிகலா அதிமுக உள்ளது. பணபலத்தை முழுமையாக நம்பி சசிகலா அதிமுக களமிறங்க உள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் எப்படியும் வென்றால்தான் மரியாதை என்ற நிலையில் இருக்கிறது திமுக.

தமிழிசை போட்டி?
இத்தொகுதியில் நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என்ற யோசனையில் உள்ளதாம்.

வசந்திதேவி
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கல்வியாளர் வசந்திதேவி நிறுத்தப்பட்டார். அத்தேர்தலில் வெறும் 4195 வாக்குகளைத்தான் வசந்திதேவியால் பெற முடிந்தது.

பொதுவேட்பாளர்
இம்முறை இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications