கொள்ளையடித்து விட்டு, ஆற அமர உட்கார்ந்து ஆம்லெட் சாப்பிட்டு விட்டுப் போன திருட்டுப் பசங்க!
திருப்பூர்: தி்ருப்பூரில் கொள்ளையடித்த வீட்டில் ஆம்லெட் போட்டு சாப்பிட்ட திருடர்களால் அதிர்ச்சியும், கலகலப்பும் ஒரு சேர ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆர்.கே.ஆர். நகரில் வசிப்பவர் நாட்ராயன். இவரது மகன் சுப்பிரமணியன். இவர் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். இதையறிந்த கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் தங்க கம்மல் என மொத்தம் 2 பவுன் நகையை திருடியுள்ளனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூபாய் 30 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
சுப்பிரமணியனின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் தேவசேனாதிபதி. தனியார் நிதி நிறுவன மேனேஜராக உள்ளார். இவரது வீடும் பூட்டியிருந்தது. இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் தேவசேனாதிபதி வீட்டின் சமையலறைக்கு சென்ற கொள்ளையர்கள் பிரிட்ஜில் இருந்த முட்டை மற்றும் பிரெட் ஆகியவற்றை எடுத்து ஆம்லெட், பிரட் வறுவல் செய்து சாவகாசமாக சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதேபோல் இவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் என்பவரது வீட்டிலும் கொள்ளை நடைபெற்றுள்ளது. வெளியூர் சென்றுள்ள அவர் இன்னும் வீடு திரும்பாததால் கொள்ளை போன பொருட்கள் குறித்த தகவல் தெரியவரவில்லை.
இந்த தொடர் கொள்ளை குறித்த தகவலறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்ப இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 3 வீடுகளிலும் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications