படகு ஒன்றுக்கு ரூ. 40 லட்சம் மானியம்: மத்திய அரசு அரசாணை வெளியீடு
பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி: பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தங்களிடம் காட்டியதாக தேசிய மீனவர் பேரவை தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான இளங்கோ கூறியுள்ளார்.
தேசிய மீனவர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான மா. இளங்கோ தலைமையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 6 மாவட்ட மீனவ பிரதி நிதிகள் டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் ஆகியோரை சந்தித்தனர். அப்போது இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது குறித்தும், மீனவர்கள் 140 படகுகளை விடுவிப்பது குறித்தும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்லியில் அமைச்சர்களை சந்தித்து விட்டு புதுச்சேரி திரும்பிய பின்னர் கடந்த சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தேசிய மீனவர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மா.இளங்கோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

மீனவர் பிரச்சனை குறித்து பேச்சு
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு மீனவர் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்து பேசினோம். இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதில் பிரச்சினைக்குள்ளாகும் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று இப்பிரச்சினை குறித்து மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாசுவராஜ், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் ஆகியோர்களிடம் தெரிவித்தோம்.

பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்
இலங்கை வசம் உள்ள இந்திய மீனவர்களின் 140 படகுகளில் சுமார் 40 படகுகள் பாழாகி விட்டதை எடுத்துச் சொல்லி அனைத்து படகுகளையும் உடனே விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்றும், இரு நாட்டு மீனவர்களும் சுமூகமாக கடலில் மீன்பிடிக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் பகுதி, தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோ கொலையில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். மறைந்த பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 கோடி மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பிரதமர் நரேந்திரமோடி விரைவில் இலங்கை செல்லவிருப்பதாகவும், அதற்கு முன்னதாக படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அளித்த உறுதி
வெளியுறவு அமைச்சகமும், மீன்வளத்துறை அமைச்சகமும், வேளாண் அமைச்சகம் இணைந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டில் 10-03-2016 அன்று தேசிய மீனவர் பேரவை சார்பில் டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி மீனவர் கோரிக்கை பேரணி நடத்தப்பட்டதை அறிந்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தேசிய மீனவர் பேரவை அகில இந்திய நிர்வாகிகளை அழைத்து பேசிய போது விடுக்கப்பட்ட கோரிக்கையை அமைச்சர் அப்போதே ஏற்றுக் கொண்டு ஆழ்கடலில் மீன்பிடிக்க இந்தியாவின் அனைத்து கடற்கரை மாநிலங்களின் பாரம்பரிய மீனவர்களுக்கு மட்டும் அனுமதி, பயிற்சி, கடனுதவி மற்றும் மானியம் வழங்கப்படும் என்ற உறுதி அளித்திருந்தார்.

50% மானியம் வழங்க கோரிக்கை
அந்த உறுதிமொழியை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிக்க ரூ.80 லட்சம் செலவாகும் என்றும் இந்திய பாரம்பரிய மீனவர்களுக்கு 50% மானியத்துடன் குறைந்த வட்டிக்கு வங்கிகள் மூலம் 50 சதவிகித தொகை கடனாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ரூ. 80 லட்சம் வரை செலவாகும் என்பதால் மீனவர்கள் சொத்து ஜாமீன் வழங்க இயலாது. எனவே படகையே ஜாமீனாக வைத்துக் கொண்டு நபார்டு அல்லது என்சிடிசி மறு கடனுதவி வசதியுடன் அரசுடமை வங்கிகள் இந்த கடனுதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேசிய மீனவர் பேரவை கடந்த ஓராண்டாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் நரேந்திரமோடி அவர்களை அணுகி வலியுறுத்தி வந்தோம்.

ரூ.40 லட்சம் மானியம்
தொடர் முயற்சியின் காரணமாக மத்திய வேளாண் அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகிய அனைத்து தரப்பு ஒப்புதலுடன் தற்போது எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான அரசாணை கடந்த 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையின் நகலை வேளாண் அமைச்சர் எங்களிடம் அளித்தார். இந்த அரசாணையின்படி படகு ஒன்றுக்கு தனி நபருக்கோ, குழுவினருக்கோ மத்திய அரசு வழங்கும் ரூ.40 லட்சம் மானியம் அல்லாமல், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் மானியம் வழங்கலாம் என்றும் அதற்குரிய திட்டத்தை சமர்ப்பிக்கும்படி கடற்கரை மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. திட்ட தொடக்க விழா விரைவில் நடைபெறும் என்றும், அதற்கு இந்த திட்டத்தை கோரி ஆலோசனை வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் எங்களை அழைப்பதாகவும், மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்தார்.

தமிழக அரசின் திட்டத்தை மாற்றலாம்
எங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு ரூ. 40 லட்சம் மானியம் வழங்க உத்தரவிட்ட மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் அவர்களுக்கு இந்திய பாரம்பரிய மீனவர்கள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தோம். படகு ஒன்றுக்கு ரூ.30 லட்சம் மானியத்துடன், ரூ.60 லட்சம் செலவில் படகு கட்ட தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ள திட்டம் மீனவர்கள் பெரும்பாலோனரால் பயனடைய முடியாத நிலையை ஏற்றுக் கொண்ட மத்திய மீன்வளத்துறை இந்த புதிய மத்திய அரசின் திட்டத்தின் மூலம் தமிழக அரசு திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

ரூ.1000 கோடி நிதி வழங்கப்படும்
அதே போல் இந்த புதிய மத்திய அரசின் ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிப்பு திட்டம் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு உள்ளாகும் 6 மாவட்ட மீனவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதிக படகுகள் வாங்க மானியத்துடன் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக - புதுச்சேரி அரசுகளை கேட்டுக் கொள்வதாகவும் மத்திய வேளான் அமைச்சர் தெரிவித்தார். அதற்குரிய சிறப்பு திட்ட நிதியாக உடனடியாக ரூ.100 கோடி மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். படிப்படியாக இத்திட்டத்திற்காக ரூ. 1000 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒருவாரத்திற்குள் வெளியிடப்படும்
இந்திய கடல் மீன்பிடி கொள்கை வடிவமைத்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட டாக்டர். எஸ். ஐயப்பன் கமிட்டி பரிந்துரைகள், தேசிய மீனவர் பேரவை ஆலோசனை உள்ளிட்ட பல தரப்பு தேசிய, மாநில மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்குரிய அறிவிப்பு இன்றும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எம்பி, உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு
டெல்லி சென்றிருந்த தேசிய மீனவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் 6 மாவட்ட பிரதிநிதிகள், மத்திய வெளியுறவு அமைச்சர், வேளாண் அமைச்சர், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் சுதர்சன் பகவத், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோஷி,. வேளாண்துறை செயலாளர் டி.கே.சவுத்ரி, மீன்வளத்துறை இணை செயலாளர் ஆதித்யா ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

ஏற்றுமதி வளாகம் அமைக்க உறுதி
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தமிழகம், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 15 கடற்கரை மாவட்ட மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை கேரளா மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சுட்டிக்காட்டி கடலோர மாவட்டங்களின் நடுப்பகுதியில் குறிப்பாக காரைக்கால் - நாகப்பட்டினம் பகுதியில் கடல் மீன்பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வளாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும், அதனை ஏற்றுக் கொண்டு ஆவன செய்வதாக உறுதி அளித்தனர். இவ்வாறு தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications