அதிமுக தலைமை அலுவலகத்தில் கலகம் ஏற்படுத்த போகிறோமா? உருக்கமாக சி.வி.சண்முகம் சொன்ன வார்த்தை
சென்னை: அதிமுக அலுவலகத்தில் கலகம் செய்ய போவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறியிருப்பதாவது: அதிமுக தலைமைக் கழகத்திற்கு நாங்கள் வரபோவதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ரத்தம் அதிமுக ரத்தம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த எங்களை எம்எல்ஏவாக, எம்பியாக, அமைச்சராக பதவிகளை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கம். நாங்கள் அதிமுக தலைமை கழகத்தை கோயிலாக மதிக்கிறோம்.
அதிமுக தலைமைக் கழகம்
எந்த நிலையிலும் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் அதிமுக தலைமை கழகத்தின் மீது ஒரு தூசி ஏற்படுவதற்கோ எங்களால் அந்த தலைமைக் கழகத்திற்கு சிறிதளவு கூட பாதிப்பேற்படுவதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கலகம் செய்கிறோமா
அங்கு கலகம் செய்ய போவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது. எந்த சூழலிலும் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வரமாட்டோம். சட்டப்படி அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என நிரூபித்த பிறகுதான் அங்கு செல்வோம்.
அச்சமடைய வேண்டாம்
எனவே யாரும் அச்சமடைய வேண்டாம், கவலைப்பட வேண்டாம். எந்த நிலையிலும் எந்த சூழலிலும் எங்களது கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எங்கள் உயிர் மீதுதான் இந்த தலைமைக் கழகத்தில் கால் வைக்க முடியும். இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மூத்த தலைவர் சி.வி. சண்முகம் தரப்பினருக்கும் இடையே நிலவிவரும் மோதல் போக்காலும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புதிய பிளவாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
தமிழக சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணி 73 இடங்களுடன் இரண்டாம் இடத்தையும், அதிமுக கூட்டணி 53 இடங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றது. இதில், அதிமுக தனித்து 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது.
ஏமாற்றம்
கடந்த 2021 தேர்தலிலும் ஆட்சியை இழந்த அதிமுகவுக்கு, இந்த முறையும் ஏற்பட்ட தோல்வி பெரும் ஏமாற்றத்தையும், கட்சியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, 'திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி' என்ற பேச்சு கட்சிக்குள் இரு வேறுபட்ட கருத்துகளை உருவாக்கி, உள்ளுக்குள்ளேயே பிளவுக்கு வழிவகுத்தது.
போர்க் கொடி
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இது அஇஅதிமுகவில் ஒரு பெரிய உடைப்பை ஏற்படுத்தியது.
தனி அணி
இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனியாக ஒரு அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்றும், கட்சியின் பொதுக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். மேலும், எஸ்.பி. வேலுமணியைச் சட்டசபைக் குழுத் தலைவராகவும் தேர்வு செய்தனர்.
எடப்பாடி பழனிசாமி தேர்வு
இதேவேளை, எடப்பாடி பழனிசாமியைச் சட்டசபைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்து அவரது தரப்பினர் தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் கடிதம் அளித்தனர். அதேபோல், எஸ்.பி. வேலுமணியைச் சட்டசபைக் குழுத் தலைவராக அறிவித்து சி.வி. சண்முகம் தரப்பினரும் கடிதம் கொடுத்தனர். இவ்விரு சம்பவங்களும் அஇஅதிமுக இரண்டாகப் பிரிந்ததாகக் கருத வழிவகுத்தன.
தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு
சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அஇஅதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உட்பட 26 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்முகம் அன்ட் கோ கேட்பது நியாயம் தானே
எனினும் சி.வி. சண்முகம் தரப்பை ஆதரிக்கும் தொண்டர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெல்லவில்லை என்கிற போது அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவராகவே பதவி விலகுவதுதானே நியாயம். புதுவையில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று வைத்திலிங்கம் பதவி விலகியது போல் எடப்பாடி பழனிசாமியும் பதவி விலகி, அதிமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேறு ஒருவரை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications