ஆபாச படங்கள்.. அதிர்ந்த சேலம்.. ஸ்கெட்ச் போட்ட சைபர் கிரைம் போலீஸ்!.. சிக்கிய திமிங்கலம்
சேலம்: பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து அதை வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்த நிலையில், இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கைக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு அதை தவறாக பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியாக கடந்த சில ஆண்டுகளாகவே சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதேபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் போலீஸிடம் வசமாக சிக்கியுள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து ஒரு மெஸேஜ் வந்திருக்கிறது. அதில், "எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே நான் கேட்ட பணத்தை உடனடியாக அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யாரோ ஒருநபர் தன்னை மிரட்டுவதாக நினைத்த கார்த்தி இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.
ஆனால் அதன் பின்னர்தான் விஷயமே பெரியதாக வெடித்திருக்கிறது. அதாவது இந்த மெஸேஜ் வந்த நாளன்று இரவு சுமார் 12.30 மணிக்கு இதேபோல அடையாளம் தெரியாத ஒரு நம்பரிலிருந்து செல்போன் அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய நபர், கார்த்தியின் மனைவியையும், தங்கையையும் தவறான உறவுக்கு அழைத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்தி மறுமுனையில் பேசிய நபரை திட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.
ஆனால் அன்று தொடங்கி இரண்டு நாட்களாக இதேபோன்று அழைப்புகள் வந்திருக்கின்றன. மட்டுமல்லாது இவருடைய மனைவி மற்றும் தங்கையின் போட்டோக்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சோஷியல் மீடியாக்களில் பரவியுள்ளது. அதன் பின்னர் இரண்டு நாட்களுக்கு முன் பணம் கேட்டு வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பிய நபர், "நான்தான் உன்னுடைய மனைவி மற்றும் தங்கையின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்தேன். இப்போதாவது நான் கேட்கும் பணத்தை கொடுத்துவிடு. இல்லையெனில் பிரச்னை மேலும் மோசமாகிவிடும்" என்று மிரட்டியுள்ளார்.
இதை பார்த்து அதிர்ந்த கார்த்தி உடனடியாக சேலம் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். புகாரையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், வாட்ஸ்அப்பில் மிரட்டிய நபருக்கு பணம் அனுப்புவதாகவும், அக்கவுண்ட் நம்பரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டு பெறுமாறு கார்த்திக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படியே கார்த்திக், பேங்க் அக்கவுண்ட் நம்பர் கேட்க அந்த நபம்பரை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடியை சேர்ந்த சரத்குமார் என்பதை சைபர் கிரைம் போலீசார் உறுதி செய்தனர்.
இதனையடுத்து சரத்குமாரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.3 லட்சத்தை முடக்கியுள்ளனர். தனது பணம் முடக்கப்பட்டது குறித்து புகார் எழுப்பிய சரத்குமாரை வங்கி அதிகாரிகள் சேலத்திற்கு வரவழைத்துள்ளனர். சேலத்தில் சரத்குமாருக்காக காத்திருந்த போலீஸ் அவரை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இவர் கடந்த சில மாதங்களாக ஏராளமான செல்போன் எண்களை சேவ் செய்து வைத்து அந்த செல்போன் எண்ணின் வாட்ஸ்அப் டிபியில் உள்ள பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார்.
பின்னர் அந்த நம்பருக்கு அழைத்து அக்கவுண்டில் பணம் போட சொல்வார். பணம் போடாதவர்களுக்கு தான் ஏற்கெனவே மார்ப்பிங் செய்து வைத்திருந்த ஆபாச படத்தை அனுப்புவார். இதனால் பயந்து போய் பலர் சரத்குமார் கேட்கும் பணத்தை கொடுத்திருக்கின்றனர். இப்படியாக இதுவரை 900க்கும் அதிகமான பெண்களின் போட்டோக்களை மார்ப்பிங்க செய்து வைத்திருக்கிறார். ஆனால் சேலத்தை சேர்ந்த கார்த்தியிடம் மோசடியில் ஈடுபடும்போது சரத்குமார் வசமாக சிக்கியுள்ளார்.
என்னதான் சைபர் போலீஸ் திறமையாக பணியாற்றினாலும், நம் வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாக இருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications