கைவிட்டுப் போன இரட்டை இலை சின்னம்... சசிகலா அணிக்கு பயங்கர பேரிடி... எதிர்காலம், என்னவாகும்?
இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முதல்வர் அணிக்கு வழங்கியுள்ளதால் சசிகலா தரப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
Recommended Video

டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முதல்வர் அணிக்கு வழங்கியுள்ளதால் சசிகலா தரப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை கைப்பற்றிய சசிகலா பொதுச்செயலாளரானார். கட்சி அதிகாரம் மட்டும் போதாது ஆட்சி அதிகாரமும் வேண்டும் என்ற அவர் முதல்வராக ஆசைப்பட்டார்.
இதற்காக அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸிடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை பெற்றது சசிகலா குடும்பம். இதனால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கினார்.

சசி குடும்பத்துக்கு சறுக்கல்
ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்ட அவர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டுகளை கூறினார். அன்று முதல் சசிகலா குடும்பத்துக்கு சறுக்கல்தான்.

வண்டி வண்டியாக பிரமாண பத்திரங்கள்
இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் கட்சியும் சின்னமும் தங்களுக்குதான் வழங்கப்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் மாறி மாறி வண்டி வண்டியாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

தடைவிதத்த தேர்தல் ஆணையம்
இதனால் சின்னத்தையும் கட்சியையும் முடக்கியது தேர்தல் ஆணையம். கட்சிப் பெயரையும் சின்னத்தையும் இரு தரப்பினரும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.

ஓபிஎஸுடன் கூட்டு
ஒருக்கட்டத்தில் சசிகலாவையும் தினகரனையும் ஒதுக்கி வைத்த ஈபிஎஸ் அணி ஓபிஎஸ் அணியுடன் கூட்டு சேர்ந்தது. சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி அதனை தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பித்தது.

முதல்வர் அணிக்கு சின்னம்
இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் என இரு அணி நிர்வாகிகளும் மாறி மாறி பேட்டிக் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

உண்மையான அதிமுக
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவின் வெற்றிச்சின்னம் இரட்டை இலை. சின்னம் யாரிடம் உள்ளதோ அவர்களே உண்மையான அதிமுக.

சசிகலா தரப்புக்கு பேரிடி
தற்போது அந்த சின்னம் ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டிருப்பது சசிகலா தரப்பின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. இரட்டை இலைச்சின்னம் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்புக்கு வழங்கப்பட்டிருப்பது தினகரன் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உறுதிபடுத்திய சசி நடவடிக்கை
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். அதற்கேற்றார் போல் கட்சியையும் ஆட்சியையும் ஆள சசிகலா காட்டிய அவசரம், ஜெயலலிதா போன்ற அவரது நடை, உடை, நடவடிக்கை என அனைத்தும் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

தகர்ந்த ஆட்சிக் கனவு
இந்நிலையில் இரட்டை இலைச்சின்னம் சசிகலா தரப்புக்கு கிடைக்காமல் நழுவியிருப்பது சசிகலா தரப்பின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது. குடும்ப அரசியல் செய்வோம் என்று முழக்கமிட்ட சசிகலா குடும்பத்தினரின் அரசியல் மற்றும் ஆட்சிக்கனவு இதன்மூலம் தகர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

புதிய கட்சி சின்னம்?
சசிகலா தரப்பு தேர்தல் ஆணைய தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும், ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குள் முடிவு வருவது சாத்தியமில்லை. இதனால் சசிகலா தரப்பு புதிய கட்சித் தொடங்கி புது சின்னத்துடன் களம் காண்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications