திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில்
நாடு முழுவதும் தேர்தலில் விவிபாட் கருவி பயன்படுத்தப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை: வாக்குப்பதிவு இயந்திரம் 100 சதவிகிதம் நம்பகமானது, அடுத்த தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் கருவி பயன்படுத்தப்படும். அதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தேர்தலில் முன்பெல்லாம் சில தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவில் விவிபாட் கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் விவிபாட் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இன்று அதற்காக தேவைப்படும் பயிற்சிகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு நாங்கள் அளிக்க உள்ளோம் என்று கூறினார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாஹூவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், வாக்குப் பதிவு இயந்திரம் நூறு சதவிகிதம் நம்பகமானது. இதை பலமுறை தேர்தல் ஆணையம் காட்டியுள்ளது. இதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. நல்ல முறையில் இயங்கிவருகிறது" என்று கூறினார்.
வாக்களித்த பின் யாருக்கு வாக்களித்தோம் என்று காட்டும் விவிபாட் கருவியை தேர்தலில் நாடு முழுவதும் பயன்படுத்தும் அளவுக்கு விவிபாட் கருவி இருப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது பற்றி சரியான தகவல் என்னிடத்தில் இல்லை. விவிபாட் கருவி இருப்பு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு கூறுகிறேன் என்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து பயிற்சி அளிக்க அதிகாரிகள் யாரேனும் வந்துள்ளனரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சத்ய பிரத சாஹூ, "இன்றைய பயிற்சியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி சௌமியாஜித் கோஸ் பயிற்சி அளிக்க வந்துள்ளார்" என்று கூறினார்.
2019 தேர்தலுக்கு எப்போது வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த சத்ய பிரத சாஹூ, "1.09.2018 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மறுவரைவு செய்யப்பட்டு 2019 ஜனவரிக்குப் பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைந்துவிட்டார். அந்த தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சத்ய பிரத சாஹூ, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் தேர்தல் நடத்த தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications