சிறுமி ஸ்ருதி மரணம்: அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?- ஹைகோர்ட்
சென்னை: பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து சிறுமி இறந்ததைத் தொடர்ந்து அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் இருக்கும் சிரமங்களைத் தெரிவிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு சென்னை புறநகரான சேலையூரில் உள்ள தனியார் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த 7 வயது சிறுமி ஸ்ருதி, அந்த பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கூட பேருந்துகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அரசும் புதிய விதிமுறைகளை வகுத்து அறிவித்தது.

அந்த விதிமுறைகளில் சிலவற்றை எதிர்த்து பள்ளிகள் சங்கம் மற்றும் சில பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் பள்ளிக்கூட பேருந்துகளில் படிக்கட்டு மிக தாழ்வாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றினால் வேகத்தடையை கடக்கும்போது படிக்கட்டு அதில் மோதும். அவசர கால வழியை பேருந்தின் பின்புறம் வைக்கச் சொல்வது பாதுகாப்பாக இருக்காது.
பேருந்தின் பக்கவாட்டு ஜன்னல்களில் 2 இரும்பு கம்பிகளை வைக்கவேண்டும், அவசரகால வழியை பஸ்சின் பின்பறம் வைக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் பாதுகாப்பானதாக இருக்காது.
பேருந்து ஓட்டுநருக்கு தனி கேபின் வைப்பதால், அவசர காலத்தில் ஓட்டுநர் எழுந்து வந்து மாணவர்களுக்கு உதவ முடியாமல் போகும். எனவே, இந்த விதிமுறை கள் சட்டத்துக்கு முரணாக இருக்கின்றன என்று வாதிடப்பட்டது. எனவே, இந்த விதிமுறைகள் சட்டத்துக்கு முரணாக உள்ளன என்றும் வாதிடப்பட்டது
இந்த வாதங்களைக் கேட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முழு அமர்வு, அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன? அதற்கு எப்படி தீர்வு காணலாம்? என்ற விவரங்களை மனுதாரர்கள் தரப்பு மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன? அதற்கு எப்படி தீர்வு காணலாம்? என்ற விவரங்களை மனுதாரர்கள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications