மிஞ்சிட்டாரே.. "தம்பி செந்தில் பாலாஜி".. ஒரே தகராறு.. அவரு எப்படி ஐபிஎஸ் படிச்சாரு.. சீமான் ஒரே போடு
சென்னை: "வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்துவதுதானே காலம் காலமாக நடந்து வரும் மரபு? ஆனால் அங்குள்ள மாவட்ட எஸ்பி, எனக்கு தகவல் தரவில்லை என்கிறாரே.. இவரெல்லாம் என்ன ஐபிஎஸ் படிச்சாரு?" என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நேற்றைய தினம், செந்தில் பாலாஜி தரப்பில் ரெய்டுகள் நடந்து கொண்டிருந்தபோதே, சீமானிடம் செய்தியாளர்கள் அதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு சீமான், "எல்லாவற்றிலும் சரியாக இருந்தால், சோதனைக்கு அனுமதிக்க வேண்டும். எந்தக் குற்றமும் இல்லை என்றால் எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லையே.. இவங்க தடுக்கிறதை பார்த்தால், அங்கு ஏதோ தவறு இருப்பதுபோலவே இருக்கே.. வீட்டுக்குள்ளே ஒன்னுமில்லை என்றால், அதைத் திறந்து காட்டிவிடவேண்டியதுதானே? தேர்தல் நெருங்கும்போது பாஜக எல்லோரையும் அச்சுறுத்துகிறது. லைக்கா மீது சோதனை நடத்தினார்கள், இன்றைக்கு செந்தில் பாலாஜி, இன்னும் எத்தனை வீடுகள் இருக்கிறதோ தெரியவில்லை" என்றார்.

ரெய்டு விவகாரம்:
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சீமான் சந்தித்து பேசினார்.. அப்போதும், ரெய்டு விவகாரம் குறித்து சீமானிடம் கேட்கப்பட்டது.. அதற்கு சீமான் சொன்னதாவது:
"அரசே மதுக்கடைகளை திறந்து குடிக்கிறதுக்கு அனுமதிக்கிறது... ஒன்று, குடிச்ச உடனேயே செத்து போயிடறாங்க.. இல்லாட்டி, 10 வருஷம் கழித்து மெதுவா சாகறாங்க.. கொடிய விஷத்தன்மையை கொடுக்கிறோமே என்ற வருத்தம் அரசுக்குதான் இருக்க வேண்டும்.
கூலி தொழிலாளி:
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து மது ஒழிப்புதான் என்றார்கள்.. ஆனா இப்போது அதை பற்றி பேசுறதே கிடையாது.. எல்லா மாநிலங்களிலும் மதுவுடன் கள் விற்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்தில் விற்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மதுவின் விலை அதிகமாக இருக்கிறதால், குறைந்த விலைக்கு கிடைக்கும் மதுவை கூலி தொழிலாளி தேடிச்செல்லும் நிலைமை இருக்கிறது...
செந்தில் பாலாஜி தரப்பில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், 2 தரப்பும் சொல்வதுமே தவறாக இருக்கிறது.. அதிகாரிகள் பை ஒன்றை எடுத்துக்கொண்டு, சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதாக திமுகவினர் சொல்கிறார்கள்.. எங்களுக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.. ஆக, 2 பக்கமும் இதில் தவறு இருக்கு..
வருமானவரித்துறை:
வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்துவதுதானே மரபு? ஆனால் அங்குள்ள மாவட்ட எஸ்பி, எனக்கு தகவல் தரவில்லை என்கிறார். திடுதிப்பென்று வந்துதானே இதுவரைக்கும் இங்கே சோதனைகள் நடந்துட்டு வருகிறது.. "நாங்க ரெயிடு வரப்போறோம்"னு முன்கூட்டியே சொல்லிட்டு வருவாங்களா? அப்படி முன்கூட்டியே போலீசுக்கு தகவல் தந்தால், அவர் அமைச்சர்கிட்டயோ அல்லது உரியவர்களிடமோ சொல்லிவிட மாட்டாரா? அவர் எப்படி ஐபிஎஸ் படிச்சாரு என்றே தெரியவில்லை.. வேடிக்கையாக இருக்கிறது.
தம்பி செந்தில்பாலாஜி:
நான் சொல்றது என்னன்னா, தம்பி செந்தில்பாலாஜி, சரியாக முறையாக கணக்கு வைத்திருந்தால், சோதனை செய்வதற்கு அனுமதித்திருக்க வேண்டும். விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவருடைய ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டிருந்தால் சோதனை நடத்தியிருக்க முடியுமா? விஜய் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.. அப்படிதானே இவர்களும் செய்திருக்க வேண்டும்?
பேய்க்கும் பேய்கும் சண்டை:
எல்லாருடைய வீடுகளிலும் ரெய்டு நடக்குது.. எல்லாருமே தலைவர்களாக இருக்காங்க.. செல்வாக்கு மிக்கவர்களாக இருக்காங்க.. அப்படி ரெய்டு வரும்போதெல்லாம், தன்னுடைய தொண்டர்களை, ரசிகர்களையும் கூட்டி வைத்துக் கொண்டு தகராறு பண்ணிட்டு இருந்தால், எங்கியுமே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. பேய்க்கும், பேய்க்கும் சண்டை என்கிற மாதிரி அதிகாரமும், அதிகாரமும் மோதிக்கொண்டிருக்கிறது அதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications