For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்: சீமான் வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற மலையாளச் சகோதர்களுக்கு தமிழ் மக்கள் தங்களது இருகரங்களை நீட்டி உதவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிற்கிற மக்களுக்கு தமிழ் மக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சீமான் கூறியிருப்பதாவது.

Seeman requests Tamil people to help flooding affected people of Kerala

"தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு கேரள மாநிலமே பாதிக்கப்பட்டு நிற்பது பெரும் வேதனையைத் தருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் 29 பேர் உயிரிழந்திருக்கிறச் செய்தியானது அம்மாநிலம் எத்தகையப் பாரிய இழப்புகளைச் சந்தித்திருக்கிறது என்பதற்கானச் சான்றாகும்.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளில் நீர் புகுந்து இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,39 முகாம்களில் 53,401 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இராணுவம் மீட்புப் பணியில் முழுவீச்சில் களமிறக்கப்பட்டிருப்பதும், அம்மாநில அரசு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியிருப்பதும் சற்றே ஆறுதலைத் தந்தாலும் இத்தகைய சூழ்நிலையில் மலையாளச் சகோதர்களுக்குத் துணையாக நிற்க வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும்.

தங்களது நிலத்தையும், வளத்தையும் தக்க வைத்து, மற்ற மாநிலத்தாரால் 'கடவுளின் தேசம்' எனப் போற்றப்படும் வகையில் பசுஞ்சோலையாகவும், எழில்கொஞ்சும் தேசமாகவும் கேரளத்தை உயர்த்தியிருக்கிற மலையாள மக்களின் உழைப்பு என்பது அபரிமிதமானது. அத்தகைய மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இத்துயரமானது பெரும் வருத்தத்தைத் தருகிறது.

ஆகவே, நமது அண்டை மாநிலமான கேரளத்தில் மலையாளச் சகோதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இப்பெருந்துயரில் பங்குகொண்டு அவர்கள் மீண்டுவர எல்லா வகைகளிலும் உதவிகளைச் செய்ய வேண்டியது சக தேசிய இனமக்களான தமிழ் மக்களின் தலையாயக் கடமையாகும்.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டப் பெருவெள்ளப் பாதிப்பின்போது மலையாளச் சகோதரர்கள் உணவு, உடை என அத்திவாசியப் பொருட்களை அளித்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மானுடம் போற்றினார்கள். அத்தகைய மக்கள் அல்லலுற்றிருக்கிற துயர்மிகுந்த இக்கொடிய சூழ்நிலையில் அவர்களுக்கு உறுதுணையாகத் தமிழர்கள் நிற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

எனவே, பெருவெள்ளத்தின் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிற மலையாளச் சகோதர்களுக்கு தமிழ் மக்கள் தங்களது இருகரங்களை நீட்டி உதவ வேண்டும் என அன்புரிமையோடு வேண்டுகிறேன். மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு உறுதிபூண வேண்டுமெனக் கோருகிறேன்" என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
Naam tamilar Katchi chief coordinator Seeman requested tamil people to help flooding affected people of Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X