தமிழ்நாடு, கேரளா மக்களிடையே கலவரம் ஏற்படுத்த 'எம்புரான்' படம் மூலம் திட்டமிட்ட சதி: சீமான் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, கேரளா மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட சதி நோக்கத்துடன் மோகன்லால், பிருத்விராஜ் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படத்தில் அடிப்படை ஆதாரமற்ற பொய் பரப்புரை காட்சிகளை அமைத்து கேரள மக்களிடையே தேவையற்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

பென்னிகுவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை

ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் அவர்களின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியைப் போக்கவே 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள கிட்டத்தட்ட 2 இலட்சம் ஏக்கர் விளை நிலங்களின் பாசனத் தேவையை நிறைவு செய்வதுடன், தென்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் கிடைக்கும் நீர் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள் கேரளாவின் காய்கறி தேவையில் 80% நிறைவு செய்கிறது. தன்னுடைய சொத்துக்களை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களை தென் தமிழ்நாட்டு மக்கள் இன்றும் தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர்.

இரு மாநில நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சதி

தென்தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு பல முறை தொடர்ந்த வழக்குகளைத் தீர விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்புப் பொறியியல் வல்லுநர் குழுவை அமைத்து, முழுமையாக ஆய்வு செய்து, அணை மிகவும் உறுதியாக உள்ளதை தனது தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்பிறகும் கேரள அரசின் மறைமுக ஆதரவுடன் மலையாளத் திரைத்துறை தொடர்ச்சியாக இத்தகைய பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டு வருவது இரு மாநில மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கான சதிச்செயலேயாகும். இத்திரைப்படத்தில் மத ஒற்றுமை குறித்து பேசும் நீங்கள், இன வெறுப்பை விதைத்தது ஏன்?

தமிழர்களின் சகிப்புத்தன்மையை சோதிக்க கூடாது

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மலையாளிகள் சிறப்புறத் தொழில் நடத்தி வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று கேரளாவிலும் நீண்டகாலமாக தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு காய்கறி மட்டுமல்லாது, மணல் மற்றும் கனிம வளங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லப்படுகின்றன. அதற்குப் பதிலாக கேரளாவிலிருந்து திருட்டுத்தனமாக மருத்துவக் கழிவுகளும், குப்பைகளும், தெருநாய்களும் ஏற்றிவரப்பட்டு தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் கொட்டப்படுகின்றன. இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் சகித்து, பொறுத்து தமிழர்கள் மனிதநேயம் காத்து வரும் நிலையில், அதனைச் சீர்குலைக்கும் செயலில் கேரளத்திரைத்துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இரு மாநிலங்களிடையே கலவரம் ஏற்படுத்த சதி

இத்திரைப்படத்தின் கதாநாயகன் ஐயா மோகன்லால் உள்ளிட்ட கேரளத்தின் பெரும் கலைஞர்களே தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழர்கள் ஏதோ மலையாள மக்களுக்கு எதிரிகள் போலவும், தமிழ்நாடு கேரளாவை அழிக்க முயல்வது போலவும் வன்மத்துடன் சித்தரிப்பது இனப்பகையைத் தூண்டி, இரு மாநில மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முனையும் திட்டமிட்ட சதியாகும். ஆகவே, எம்புரான் திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

பண்ருட்டி வேல்முருகன்

முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டிருந்த அறிக்கை: நாகர்கோவில், தென்காசி, கம்பம், போடி, பொள்ளாச்சி, கோவை என தெற்கில் இருந்து வடக்கு வரை கணிசமாக தமிழ் நிலத்துடன் தொழில், சுற்றுலா ரீதியில் கேரள மாநிலம் தொடர்பில் இருக்கிறது. இந்த எல்லைப் பகுதிகளில் இரு மாநில மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. உயர் கல்விக்காகவும், வேலைக்காகவும், மலையாளிகள் இடம் பெயரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழர்களை கொச்சைப்படுத்துவதா?

இப்படி சகோதரத்துடன் தமிழர்களும், கணிசமான மலையாளிகளும் இருந்து வரும் நிலையில், மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தி வருவது என்பது கடும் கண்டனத்துக்குரியது. மலையாள இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக் கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வண்டி ஏறும் போது, கூடவே தமிழின வெறுப்பையும் சுமந்துக் கொண்டே செல்கின்றனர். இதன் காரணமாகவே, அவர்கள் பணியாற்றக்கூடிய மலையாள திரைப்படங்களில் தமிழின வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.

அன்று ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்திய மேனன்

மலையாள இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" காதல் திரைப்படத்தில், இலங்கை அமைதிப்படையை ஆதரித்தும், ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் காட்சி சம்மந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டிருந்தது. தென் தமிழக விவசாயிகளின் சோற்றில் மண்ணை போடும் விதமாக "முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும்" என்கிற பிரச்சாரத்தை வலியுறுத்தி சோஹன் ராய் என்ற மலையாளி 'டேம் 999' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இனம், மெட்ராஸ் கபே

தமிழர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கிய ’இனம்’, ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பை நியாயப்படுத்திய 'மெட்ராஸ் கபே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் சான்றாக இருக்கிறது.

இத்திரைப்படங்களின் வரிசையில், கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.

தேவையே இல்லாமல் முல்லைப் பெரியாறு அணை சேர்ப்பு

இத்திரைப்படத்தின் இயக்குனர் நடிகர் பிருத்விராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

குறிப்பாக, நெடும்பள்ளி டேம் என்று மாற்று பெயரிட்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டானாம். மன்னராட்சியும் போய் விட்டதாம். ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்பதாக நடிகை மஞ்சு வாரியர் பேசும் வசனம் தமிழின காழ்ப்புணர்ச்சியின் உச்சம்.

சர்ச்சை வசனங்கள்

மேலும், இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை. அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

மலையாள சினிமாவுக்கு எச்சரிக்கை

தமிழின வெறுப்பை உமிழும் இதுபோன்ற திரைப்படங்கள், தமிழ்நாடு, கேரள மாநில மக்களிடையே நீடித்து வரும் நல்லுறவை சீர்குழைத்து, இருமாநில உறவை கெடுக்கும். எனவே, எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியிருந்தார்.

ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்திய ராஜீவ் மேனன் படம் எது?

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+