செல்வமகள் சேமிப்பு திட்டம்.. சுகன்யா சம்ரித்தி யோஜனா தரும் சூப்பர் வட்டி.. மகிழும் திருப்பத்தூர்
திருப்பத்தூர்: செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு பரவலான வரவேற்புகள் கிடைத்து வரும்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் அமோக வரவேற்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.. நாளுக்கு நாள் இந்த திட்டத்தில் பெண்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மத்திய அரசு வழங்கும் சிறு சேமிப்பு திட்டம்தான், செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடம் நிறைய வரவேற்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கிடைத்து வருகின்றன.

பாதுகாப்பான முதலீடு மற்றும் சிறந்த சேமிப்பு திட்டம் என்பதாலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் ஆகிய முக்கிய செலவுக்காகவும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஒரு குடும்பத்தில் இருந்து 2 பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும்.
பெண் குழந்தைகள்: குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கை ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250/- முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1,000 செலுத்த வேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை இந்த திட்டத்தில் சேமிக்கலாம்.. அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம்.
ஆவணங்கள்: இந்த திட்டத்தில், ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.. செல்வ மகள் திட்டம் கணக்கை துவங்க வேண்டுமானால், விண்ணப்பப் படிவம், பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள சான்றிதழ், பான் கார்டு, கூட்டுறவு அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் (ஏதாவது ஒன்று, பெற்றோர் அல்லது காப்பாளரின் முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட், மின்சார கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம்.
பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு அல்லது அவசர தேவைக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸ்களில் இந்த கணக்கினை தொடங்கலாம்.. அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். ஒருவேளை நேரடியாக போஸ்ட் ஆபீஸ் போக முடியாவிட்டால், ஆன்லைன் மூலமாகவே ஆக்டிவேட் செய்ய முடியும்.
பலரும் ஆர்வம்: இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு வெகுவாக வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, செல்வமகள் திட்டத்தில் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.. 8.2. சதவீதம் வட்டி என்பதாலும், 250 ரூபாய் குறைந்தபட்ச தொகை என்பதால், பலரும் இந்த கணக்கை துவங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதில் பணம் செலுத்த துவங்கிவிட்டால், பெற்றோர்களே நினைத்தாலும், பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடியும் முன்பு பணத்தை எடுக்க முடியாது.. திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை 82 ஆயிரம் பயனாளிகள் செல்வமகள் திட்டத்தின்மூலம் பலனடைந்துள்ளனர் என்றார்.
அதிக வட்டி: இதுகுறித்து செல்வமகள் திட்டத்தில் இணைந்த தாய்மார்கள் சொல்லும்போது, "எங்கள் குழந்தைக்கு 1 வயது இருக்கும்போதே இந்த திட்டத்தில் இணைந்துவிட்டோம்.. படிப்பு செலவு, திருமண செலவு வரை இனி நிம்மதியாக இருக்கலாம்.. அதனால் எங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு டெபாசிட் செய்கிறோம்.. இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி அளவுக்கு, மற்றதில் கிடைப்பதில்லை" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications