ஐடி ரெய்டும் அண்ணாமலையும்.. "டார்கெட் செந்தில் பாலாஜி.." ஆர்எஸ் பாரதி பரபர குற்றச்சாட்டு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த ரெய்டு காலை தொடங்கி இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

கரூர், சென்னை, கோவை மட்டுமின்றி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதற்கிடையே சில இடங்களில் வருமான வரித்துறைக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவமும் நடந்தது
ஆர்.எஸ். பாரதி:
வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில், இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "கர்நாடக தேர்தலில் பணத்தைக் குவித்தும் பாஜக தோல்வியைத் தழுவியது. கர்நாடகா தேர்தலுக்குப் பிரதமர் மோடி இதுவரை இல்லாத வகையில் பிரசாரம் செய்தார்.. அனுமன் பெயரை வைத்து ஆட்சியைப் பிடிக்கவும் முயன்றனர். வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்தனர்.
இருப்பினும், கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றனர். பாஜக அங்கே மிகப் பெரிய தோல்வி அடைந்தார்கள். கர்நாடக தேர்தல் முடிவு காஷ்மீர் முதல் கர்நாடகா வரை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த தோல்வியை மறைக்க 2000 நோட்டுகளை வாபஸ் பெற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ளார். அங்கே முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல ஒப்பந்தங்களை அவர் போட்டுள்ளார். தமிழகத்திற்கு வரும் முதலீடு குறித்த செய்திகள் தொடர்ச்சியாக மக்களிடையே சென்று சேர்கிறது. இதை மழுங்கடிக்கும் விதமாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. தமிழக முதல்வர் இல்லாத நேரத்திலும் அவர் குறித்த செய்திகள் மக்களிடையே சென்று சேர்கிறது. அதைத் தடுக்கவே இப்படிச் செய்துள்ளனர்.
டார்கெட் செய்யப்படும் செந்தில் பாலாஜி:
எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இதைப் பார்த்து அஞ்சப்பட்டோம்.. அமைச்சர் செந்தில் பாலாஜியை அண்ணாமலை திட்டமிட்டு டாக்ரகெட் செய்து வருகிறார்... பாஜக என்றால் என்ன.. அதன் அதிகாரம் என்ன என்பதைச் செந்தில் பாலாஜி 10 நாட்களில் உணர்வார் என்று சமீபத்தில் அண்ணாமலை சொல்லி இருந்தார்.
2021 சட்டசபைத் தேர்தலில் கோவை, கரூரில் கணிசமான இடங்களில் வென்றது. அதேநேரம் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி வந்த பிறகு, அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100/ 100 வென்றது. இதை ஜீரணிக்க முடியாமல் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார்.. .

சந்தேகம்:
பொதுவாக ஒரு ரெய்டு நடக்கிறது என்றால் அதற்கு முன்பு, மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரியப் பாதுகாப்பைப் பெற்றுச் செல்வார்கள். ஆனால், இன்று போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சென்றுள்ளனர். பொதுவாகவே செல்வாக்கு மிக்கவர் மீது ரெய்டு நடந்தால் கொந்தளிப்பு இருக்கவே செய்யும். மாநில போலீசாருக்கு சொல்லாமல் ரெய்டு நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது..
திடீரென அதிகாலை ஒருவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள் என்றால் யாராக இருந்தாலும் சந்தேகம் வரவே செய்யும். இது குறித்து செந்தில் பாலாஜிக்குத் தகவல் தெரிவித்தேன். அவரது அறிவுறுத்தலைத் தொடர்ந்து உடனடியாக தொண்டர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். திமுகவுக்குக் களங்கம் ஏற்படுத்தவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சோதனை நடத்தியுள்ளனரோ எனச் சந்தேகம் வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications