ஜெ. தொடங்கி வைத்த புதிய பேருந்துகள் "புரட்சிகரமாக" ஓடுகின்றன!.... கருணாநிதி கிண்டல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பேருந்துகளின் டப்பா டான்ஸ் ஆடுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கிண்டல் அடித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வருகிறது என்றதும்,அவசர அவசரமாக முதலமைச்சர் ஜெயலலிதா 100 கோடி ரூபாயில் புதிதாக வாங்கப்பட்ட 422 பேருந்துகளைத் தொடங்கி வைத்ததாகச் செய்தி வந்திருக்கிறதே; அந்தப் பேருந்துகள் எப்படி உள்ளதாம் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
இதற்கு அவர் அளித்துள்ள பதிலில், நான் அந்தப் பேருந்துகளைப் பார்க்கவில்லை. ஆனால் இந்த இதழ் ஜூனியர் விகடன் இதழில் அந்தப் பேருந்துகளைப் பற்றி ஒரு பெட்டிச் செய்தி வந்துள்ளது. அதில், "ஜெயலலிதா தொடங்கி வைத்த பஸ்கள் டப்பா டான்ஸ் ஆடுகிறது. பஸ் கியர் உடைந்தும், ஆங்காங்கே பஸ்கள் பிரேக்டவுனாகியும் காட்சி அளிக்கிறது"என்று எழுதியிருக்கிறார்கள். புதிய பேருந்துகளே இப்படிப் "புரட்சிகரமாக"ஓடுகின்றனவே! பேருந்துகள் தயாராக இருந்த போதும், முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க தேதி கொடுக்க தாமதமானதால், அந்தப் பேருந்துகள் எல்லாம் வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்பட் டிருந்தபோது பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் 23-10-2015 தேதிய "இந்து"ஆங்கில நாளிதழில், "SETC runs worn-out buses - Unions" என்ற தலைப்பில் "The new buses, flagged off by the Chief Minister Jayalalithaa recently, have been waiting in depots for over six months" - அதாவது முதலமைச்சர் ஜெயலலிதா கொடி அசைத்து தொடங்கி வைத்த புதிய பேருந்துகள் ஆறு மாதங்களுக்கு மேலாக டெப்போவில் கிடந்தன என்று "இந்து"எழுதியுள்ளது என்று கூறியுள்ளார்.
இதேபோல மாநிலக் காவல் துறையின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதை உயர் நீதிமன்றம் திரும்பவும் வலியுறுத்தியது என்று வெளிவந்துள்ள செய்தி பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, தமிழகச் சட்டப்பேரவையில் காவல் துறை மானியத்தின் மீது பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி; மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெளிப்படையாகக் கூறவில்லை என்று மறுத்ததற்குப் பிறகும், 14ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி குறிப்பிட்டதைத்தான் "இந்து" நாளிதழும் மற்ற நாளேடுகளும் வெளியிட்டுள்ளன.
"High Court reiterates lack of confidence in State Police"என்ற தலைப்பிலே அந்தச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில், "The First Bench of the Court reiterated its earlier view; "There is lack of confidence at present, we have no doubt. The First Bench of Chief Justice S.K. Kaul and Justice T.S. Sivagnanam made the observation in an eight-page order directing the Central and the State Governments to make necessary security arrangements for CISF or any other independent security agency to man certain essential areas, in coordination with the State Police, on Court premises" என்றெல்லாம் வெளி வந்துள்ளது. மாநில காவல் துறையோடு சேர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றுதான் இருக்கிறதே தவிர, மாநில காவல் துறையே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று கூறவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications