"ஜெ.வின் பொற்கால ஆட்சி".. புளகாங்கிதத்தோடு பிளக்ஸ் போர்டு வைத்த எஸ்.ஐ இடமாற்றம்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே முதல்வர் ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டி பிளக்ஸ் போர்டு வைத்த சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரவி. இவரது சொந்த ஊர் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை.
காவல்துறையில் பலர் மறைமுகமாக கட்சி விசுவாசிகளாக உள்ளனர். அதேபோல ரவியும் அதிமுக ஆதரவு போலீஸ்காரர். ஜெயலலிதா என்றால் இவருக்கு உயிர். இந்த நிலையில் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து தனது ஊரில் உள்ள கடை வீதியில் பெரிய பிளக்ஸ் போர்டு வைத்தார் ரவி.

அதில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, மீண்டும் தங்களின் பொற்கால ஆட்சியில் பணிபுரிவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. வலது புறம் பெரிய சைஸில் ஜெயலலிதா படமும் இடது ஓரத்தில் ரவியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந்த பிளக்ஸ் போர்டு பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. வாட்ஸ் ஆப்பிலும் இது வேகமாகப் பரவியது. சமூக வலைதளங்களில் ரவியின் பிளக்ஸ் போர்டு குறித்து விமர்சனங்களும் பரவின.
இதுகுறித்து ரவி விளக்கம் அளிக்கையில் இதை தன் சார்பில் தனது நண்பர்கள் வைத்ததாகவும், அதில் உள்ள வாசகங்களை தானே எழுதியதாகவும் விளக்கியிருந்தார். இருப்பினும் தான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
எனக்கு முதல்வர் ஜெயலலிதாவைப் பிடிக்கும். அந்த அடிப்படையில் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வைக்கப்பட்டதே தவிர அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் ரவி கூறியிருந்தார்.
இதேபோல முன்பு கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் தான் பிளக்ஸ் போர்டு வைத்ததாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் அவர் மீது திருவாரூர் எஸ்.பிக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து ரவியை ஆயுதப் பிரிவுக்கு இடமாற்றம் செய்த எஸ்.பி. ஜெயச்சந்திரன் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
