கைகொடுத்த வாக்காளர் பட்டியல்.. மக்களின் பேரார்வம்.. 100% தடுப்பூசி.. சத்தமில்லாமல் சாதித்த கிராமம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் அனைவருக்கும் 100% தடுப்பூசி போட்டு சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் மக்களோடு மக்களாக கலந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது.
ஆனால் இன்று வரை தனது உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டு மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான்.
இந்தியாவில் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்டபோது ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கினார்கள். தடுப்பூசி மீதான பயமே இதற்கு காரணம்.

சீக்கம்பட்டு கிராமம்
தற்போது தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நகரத்தில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி குக்கிராமத்தில் வசிக்கும் மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்த வரிசையில் இணைந்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சீக்கம்பட்டு கிராமம்.

வாக்காளர் பட்டியல்
சீக்கம்பட்டு கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அதாவது 100 சதவீதம் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது. சீக்கம்பட்டு கிராமத்தில் மொத்தம் 350 குடும்பங்கள் உள்ளன. இப்போது, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாக்காளர் பட்டியலை கையில் எடுத்தனர்.

முதலில் தயக்கம்
மொத்தம் 1026 வாக்காளர்களில் வேலைக்காக வெளியூர், வெளிநாடு சென்றிருப்பவர்கள், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் தவிர்த்து மீதமுள்ள 715 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. முன்னதாக மே 13-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை கிராமத்தில்12 முறை ஊரில் முகாம் போட்டபோது தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாருமே வரவில்லை.

செம விழிப்புணர்வு
இதனால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால் மற்றவர்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தற்போது அங்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முறையாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமம் இது என்று சுகாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்களின் விருப்பம்
இந்த கிராமம் இச்சாதனையை அடைவதறகு கிராமச் செயலாளர், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் மிகவும் உதவியாக இருந்தனர்.தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய பலரை அவர்கள் வேலை செய்யும் இடத்துக்கே சென்று தடுப்பூசி போட்டுள்ளனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்த சீக்கம்பட்டு கிராமத்தை போன்றே அனைத்து கிராம மக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications