கும்பாபிஷேகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விமானத்தில் ரூ.25 கோடியில் தங்கத்தகடுகள் பதிப்பு
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் நடைபெறுவதையொட்டி, கோவில் திருப்பாவை விமானத்தில் ரூ.25 கோடி செலவில் சிற்ப தங்கத்தகடுகள் பதிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இதற்கு முன்பு இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு பிரவரி 10-ம் தேதி நடைபெற்றது. தற்போது ராம்கோ தொழில் குழுமத் தலைவரும், ஸ்ரீஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா மற்றும் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோரின் முயற்சியால் திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக உபயதாரர் மூலம் ரூ.25 கோடி மதிப்பிலான 70 கிலோ தங்கம் பெறப்பட்டு, சிற்பங்களுக்கு தங்கத் தகடு பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிற்பங்களுக்கான தங்கத்தகடு செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று நிறைவு பெற்றது.
அதனையடுத்து, இந்த தங்கத்தகடுகளை திருப்பாவை விமானத்தில் உள்ள சிற்பங்களுக்கு பொருத்தும் பணியை தக்கார் ரவிச் சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மணவாள மாமுனிகள் சன்னதி ஜியர், மதுரை கூடலழகர்கோவில் உதவி ஆணையர் மற்றும் நகை சரிபார்க்கும் அலுவலர் அனிதா, உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் திருப் பணிகள் பொறுப்பு அலுவலர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications