ஸ்டாலினுக்கு தொடர்ந்து 'தலைவலி’ தரும் தென்காசி.. அப்பவே அப்படி.. இன்று மா.செ பதவி பறிப்பு! போச்சே!
தென்காசி: தென்காசி தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி திமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால் வடக்கு மாவட்ட செயலாளர் நியமனம் 3 மாதங்கள் தள்ளிப்போன நிலையில், இப்போது தெற்கு மாவட்ட செயலாளர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் 72 கழக மாவட்டங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் திமுக தலைமைக் கழகத்தால் கடந்த 2022 செப்டம்பர் மாதமே வெளியிடப்பட்டது. தென்காசி வடக்கில் மட்டும் மாவட்ட செயலாளரை அறிவிப்பதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டது. தென்காசி விவகாரம் அப்போது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருந்தது.

தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்த செல்லதுரைக்கு பதிலாக, திமுக எம்.பியான தனுஷ் குமாருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தர உள்ளதாக தகவல் பரவியதால், செல்லத்துரையின் ஆதரவாளர்கள் சென்னை அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைமை கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஜய அமுதா என்பவர் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் தென்காசி வடக்கு நிர்வாகிகள் அறிவிப்பை நிறுத்தி வைத்தது திமுக தலைமை. இதையடுத்து, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் சீரமைக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. தென்காசி தெற்கில் இடம்பெற்றிருந்த சங்கரன்கோவில் தொகுதி வடக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக கடையநல்லூர் தொகுதி, தென்காசி தெற்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக பொ. சிவபத்மநாதன் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான் தற்போது தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த சிவபத்மநாதன் நேற்று முன் தினம் நடந்துகொண்ட விதம் திமுக தலைமைக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக திமுக மகளிர் தொண்டர் அணி சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மணிப்பூர் நிகழ்வை கண்டித்துப் பேசினார்.
அதன்பிறகு பேசிய மாவட்ட ஊராட்சி குழுத் தலைவி தமிழ்செல்வி தென்காசி திமுகவில் மகளிருக்கு உரிய பாதுகாப்பு இல்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். கட்சியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மாவட்ட செயலாளருக்கு மணிப்பூர் சம்பவம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி மேடையிலேயே பேசினார்.
இதனால், அதிர்ந்து போன மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மைக்கை பறித்தார். இதைத்தொடர்ந்து மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ் செல்வி ஆதரவாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளராக பணியாற்றிய சிவபத்மநாதன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் என்பவரை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென்காசி திமுகவில் ஏற்பட்ட மோதல் விவகாரம் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தே மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications