”உங்கள் வீட்டு பிள்ளை நான்... உங்களைத் தேடி வருவார்கள் திமுக எம்.எல்.ஏக்கள்”- கொளத்தூரில் ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயித்து திமுக ஆட்சிக்கு வந்தால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திமுக எம்.எல்.ஏக்கள் உங்களை நாடி வந்து நன்மை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஸ்டாலின் நேற்று மாலை அங்கு தனது முதல் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பேசிய அவர், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த தொகுதியில் என்னை 2011 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தரவில்லை என்று சொன்னாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள்.

உங்களைப் பொறுத்தவரையில் அப்போது நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளித்தீர்கள், ஆனால் முறையாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் நிச்சயமாக 20000 - 25000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்பதுதான் உண்மை. சத்தியம். இதை பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணையிட்டு நான் சொல்கிறேன்.
ஏனென்றால், அன்றைக்கு அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அமரும் சூழ்நிலை இருந்த நேரத்தில், ஆளும் கட்சியினைச் சார்ந்தவர்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள், ரவுடிகளை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுப்பி நம்முடைய கழகத்தினரை எல்லாம் தாக்கி, நமது வழக்கறிஞர்களை எல்லாம் அச்சுறுத்தி, அங்கு இருந்த பொருட்களை எல்லாம் உடைத்து, அதன் பிறகு தேர்தல் நடத்தக்கூடிய மத்திய அரசின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரிகளையும் சிறைப்பிடித்து, நமக்கு விழுந்த வாக்குகளை எல்லாம் அவர்களுக்கு விழுந்ததாக கணக்கு சொல்லி என்னை தோற்கடிக்க எவ்வளவோ முயற்சிகளை செய்தார்கள். அதையும் தாண்டி நான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று சொன்னால் அது நீங்கள் தந்த ஆதரவு, நீங்கள் தந்த அரவணைப்புதான் என்பதை நான் என் வாழ் நாளில் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்கிறேன்.
ஆக இந்த நிலையில் மீண்டும் வரவிருக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வேட்பாளராக, கழகம் அமைத்திருக்கும் கூட்டணியின் சார்பில் நான் வேட்பாளராக உங்கள் முன் நிறுத்தப்பட்டு இருக்கிறேன். நிறுத்தப்பட்டு இருக்கிறேன் என்று கூட சொல்லக்கூடாது, உங்களுக்கு கோபம் வந்து விடும், உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறேன் என்பதுதான் உண்மை.
கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் குடித்துவிட்டு நடக்க முடியாமல் தள்ளாடும் நிலை உருவானது. ஆக, தமிழகத்தின் கலாச்சாரம் கெட்டு விடக்கூடாது, நம்முடைய பண்பாட்டை காப்பாற்றிட வேண்டும், மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிற காரணத்தால்தான் இந்த நிலை, எனவே உடனடியாக இதை மூடிட வேண்டும் என்ற முடிவெடுத்தார். உடனே முறையாக அதை அறிவித்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் அவர்கள் அதை தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கக் கூடியவர்கள், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருக்கக் கூடியவர்கள் ஒட்டுமொத்தமாக அவர்கள் எடுத்து வைத்த கோரிக்கை, "எங்களைப் போன்ற மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற்று, அந்த கடன்களை திரும்பச் செலுத்த முடியாத காரணத்தால் வட்டி செலுத்த வேண்டிய, வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை இன்று வந்துள்ளது, ஆகவே இதை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும், வட்டியையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்", என்று சுட்டிக் காட்டினார்கள். அந்த கோரிக்கையை நான் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முன் வைத்தேன். அவர்கள் தலைவர் கலைஞரின் முன் வைத்தார்கள். உடனே தலைவர் கலைஞர் அவர்கள், "அவர்களது வட்டியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வி கடனையும் நான் ரத்து செய்கிறேன்" என்று சொன்னார். அதை திமுக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக உருவாக்கப்படும். நான் துணிவோடு சொல்கிறேன், 6வது முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இன்று 94 லட்சம் பேர் என்று சொல்லி இருக்கிறேனே, இந்த உறுதி மொழிகளை எல்லாம் ஆட்சிக்கு வந்து உடனடியாக நிறைவேற்றி, இனி வேலை வாய்ப்பைத் தேடி செல்லக்கூடிய அலுவலகமாக அல்ல, வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய ஒரு அலுவலகமாக அதை மாற்றக்கூடிய ஒரு சூழல், தலைவர் கலைஞருடைய ஆட்சியில் உருவாக்கப்படும் என்ற உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் சொல்கிறேன் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களைத் தேடி வருவார்கள், உங்களை நாடி வருவார்கள் என்று நான் உறுதியுடன் குறிப்பிட விரும்புகிறேன். இனியும் அரசியல்வாதிகளை தேடி நீங்கள் போகக்கூடாது, உங்களை தேடி அவர்கள் வர வேண்டும், வருவார்கள். எனவே நம்பிக்கையோடு கொளத்தூர் தொகுதியின் வேட்பாளரான, உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கும் கழக வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தந்து வெற்றியைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்டு விடை பெறுகிறேன்" என்று பேசினார்.
இந்நிலையில் திமுக தலைவர் கலைஞரை, திமுக வேட்பாளர்கள் இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை திமுக வேட்பாளர்கள், கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்தும் பெற்றனர்.












Click it and Unblock the Notifications