ஜாதி மோதலை திமுக தூண்டுவதாக வைகோ குற்றச்சாட்டு: கோவில்பட்டியில் ஸ்டாலின் கடும் கண்டனம்
கோவில்பட்டி: சாதி மோதல்களை உருவாக்க திமுக முயற்சி செய்கிறது என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோவில்பட்டியில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணியில், மதிமுகவுக்கு கோவில்பட்டி உள்ளிட்ட 29 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மதிமுகவின் 29 தொகுதிகளில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப் புலிகள் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வைகோ சம்மதித்தார். இதையடுத்து மதிமுக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுவார் என வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வைகோ திடீரென நான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவில்லை எனவும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இது மதிமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் ஜாதி கலவரத்தை தூண்டிவிட திமுக முயற்சி செய்ததால் நான் கோவில்பட்டியில் போட்டியிடும் முடிவை கைவிட்டேன் என வைகோ தெரிவித்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக எட்டையபுரத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் பீமராஜை ஆதரித்து வாக்க சேகரித்தார். பின்னர் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், சாதி, மத பேதங்களை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட திமுக தலைவர் கருணாநிதியை சாதியின் பெயரை கூறி அநாகரீகமாக பேசியவர்கள் யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
18 வருட காலம் திமுகவில் எம்.பி. பதவி அனுபவித்த வைகோவிற்கு திமுகவை விமர்சிக்க தகுதி இல்லை என்றும் குறிப்பிட்டார். தோல்வி பயத்தில் வைகோ இருப்பதாகவும் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஜாதி மோதலை உருவாக்க திமுக முயற்சி செய்வதாக வைகோவின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications