இப்ப தெரியுதா டிடிவி தினகரன் ஏன் பாஜகவோட சேர்ந்தார்னு.. தேனியில் ரவுண்டு கட்டி வெளுத்த ஸ்டாலின்!
தேனி: திமுக - பாஜக கூட்டணி இடையே உக்கிரமான போட்டி நிலவும் தேனியில் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அங்கே போட்டியிடுவது தான். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி. ஓபிஎஸ் மகன் ஓ.பி ரவீந்திரநாத் தேனி எம்.பி ஆனார். இந்நிலையில் அதிமுக பிளவுபட்டு, ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி போட்டுள்ளார். அமமுக டிடிவி தினகரனும் பாஜக அணியில் சேர்ந்துள்ளார். அதிமுகவுக்கு வலுவாக இருந்த தொகுதியான தேனியில் தற்போது டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே கடும் மோதல் இருக்கிறது.
தேனியில் ஸ்டாலின்: இந்நிலையில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி சிபிஐஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
தேனியில் ஸ்டாலின் பேசுகையில், "கடந்த முறை தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதி தவிர எல்லாவற்றிலும் வென்றோம். அந்த ஒரே ஒரு தொகுதியான இந்தத் தேனி தொகுதியில் இந்த முறை, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். உறுதி எடுத்துவிட்டீர்களா? தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளையும் வென்று, இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசு மூலமாகத் தமிழ்நாட்டிற்கான எல்லாச் சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வருவோம். நாம்தான் எல்லாத் தொகுதியிலும் வெல்லப் போகிறோம்.
தினகரன் என்ன்வெல்லாம் பேசினார்?: தேனி தொகுதியில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன்! இதே பா.ஜ.கவைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? "பா.ஜ.க கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?" என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.
அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக - ஆளும் கட்சியாக பா.ஜ.க இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க" என்று சொன்னவர்தான் இந்த தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா?
தினகரன் பாஜக அணியில் சேர்ந்தது இதனால் தான்: மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். "மேட் இன் பி.ஜே.பி" வாசிங் மெஷின் அது! மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சியின் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.
1995-96-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். 'ஃபெரா' போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா! ஏன் இவர் பா.ஜ.கவுக்குச் சென்றார் என்று!
ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர் தினகரன்: அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும்! தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள்! கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள்! இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை, இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த, அவரை மிரட்டி இராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள்.
பி டீம்: இப்படி, பா.ஜ.கவின் தொங்கு சதைகளான எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் - தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.கவுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.கவுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. 'B-டீம்'-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.கவை குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.கவை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க!
இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் - துரோகம் இழைக்கும் பழனிசாமி - பன்னீர்செல்வம் - தினகரன் - பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
தங்க தமிழ்ச்செல்வன்: அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் அளிக்கும் வாக்கு - இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த - இந்தியாவைக் காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்!" எனப் பேசியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications