நீங்க கலெக்டரா இல்லை, அதிமுக மா.செவா?... வேலூர் ஆட்சியருக்கு ஸ்டாலின் சுளீர் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 1205 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீரை கொண்டு வந்து தந்திருக்கக்கூடிய மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் கோடி கோடி நன்றி என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். யார் விளம்பரம் செய்திருக்கிறார்கள். கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் - வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர், முனைவர் நந்தகோபால், மாவட்ட ஆட்சித்தலைவர் - வேலூர் மாவட்டம் ஆகியோர். இதை அரசு சார்பாக கொடுத்து விட்டு கட்சி சார்பாக கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நந்தகோபால் எங்கிருந்து வந்தார். அவர் மாவட்ட ஆட்சித் தலைவரா இல்லை அ.தி.மு.க-வின் மாவட்ட செயலாளரா? என்று கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

வேலூரில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசினார். அவரது பேச்சின்போது அரசின் அலட்சியப் போக்கைக் கடுமையாக சாடிப் பேசினார்.

ஆர்ப்பாட்டப் போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து....

வேலூர் குடிநீர்ப் பிரச்சினை

வேலூர் குடிநீர்ப் பிரச்சினை

தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த பொழுது அண்ணன் துரைமுருகன், மாவட்ட செயலாளர் காந்தி , ஒருங்கிணைந்த மாவட்டக் கழகத்தில் இருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் முன்னோடிகள் அத்தனை பேரும் வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைக்கும்படி கோரிக்கையாக எடுத்து சொல்ல, அதை அண்ணன் துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து தலைவர் கலைஞரிடம் குறிப்பிட்டு சொன்னார்கள்.

என்னிடம் வந்த திட்டம்

என்னிடம் வந்த திட்டம்

அப்போது குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறுப்பு, உள்ளாட்சித்துறை அமைச்சராக எனக்கு இருந்தது. அதனால் தலைவர் கலைஞர் வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்சனை தொடர்பான பணிகளில் ஈடுபடுமாறு என்னிடம் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ஏற்று நான் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டேன். பின்னர், தலைவர் கலைஞர் அவர்கள் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தைப் பற்றி சட்டமன்றத்தில் அறிவித்தார். 31.12.2010 அன்று 1295 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு 21.05.2011-ல் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வேலூர் மாநகராட்சி உட்பட, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான நீரை வழங்கிட வேண்டுமன்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் துவங்கப்பட்டது.

அடிக்கல் நாட்டினேன்

அடிக்கல் நாட்டினேன்

500, 1000 அல்லது 2000 கோடிகளுக்கு மேல் ஏதேனும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டால் ஓராண்டுக்குள், அதிகமானால் 2 ஆண்டுக்குள் அந்தத் திட்டம் முடிக்கப்பட வேண்டும் என்பது மரபாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி, டிசம்பர் 2012-க்குள் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். 2011-ம் வருடம் ஜனவரி 25-ம் தேதி காட்பாடி அருகில் உள்ள செங்குட்டை என்ற இடத்தில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு நான் தான் அடிக்கல் நாட்டினேன். அண்ணன் துரைமுருகன் அப்போது சட்ட அமைச்சர். அவரும் உடன் இருந்தார். அப்போது நான், "இத்திட்டத்தை இரு வருடத்துக்குள் நிறைவேற்றி, இம்மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான நீரை வழங்கிட வேண்டுமென்று நான் குறிப்பிட்டு சொன்னேன். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு இந்த ஐந்தாண்டு காலத்தில் சுமார் 25 சதவீத பணிகளை மட்டுமே அ.தி.மு.க. அரசு முடித்திருக்கிறது.

நினைவுபடுத்த விரும்புகிறேன்

நினைவுபடுத்த விரும்புகிறேன்

நான் ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும் பொருட்டு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. அப்போது, திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கு, அத்துறையின் அமைச்சராக நான் ஜப்பான் சென்று வங்கி அதிகாரிகளை சந்தித்து கடன் வழங்குவதற்கு ஒப்புதல் பெற்றேன். பின்னர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 75 சதவிகித பணிகள் முடிவுற்ற நிலையில் தேர்தல் வந்தது.

வெற்றி வாய்ப்பை இழந்தோம்

வெற்றி வாய்ப்பை இழந்தோம்

அந்த தேர்தலில் நாம் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தோம். ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டது. அப்போது நான் தலைவர் கலைஞர் அவர்களிடம் அனுமதி பெற்று அந்த மாவட்டங்களுக்கு சென்று மாவட்டக் கழக நிர்வாகிகளோடு கலந்து பேசி மிகப்பரிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த வேளையில், அவசர அவசரமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை தொடங்குவதாக வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவித்தார். ஆனால், இன்னும் அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் குடிநீர் போய் சேரவில்லை என்ற நிலையில் தான் அந்த திட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

தண்ணியில்லா காடு

தண்ணியில்லா காடு

அதே போல, இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம். தண்ணியில்லா காடாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த மாவட்டம் இராமநாதபுரம். அந்த மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைக்க தலைவர் கலைஞர் அவர்கள் 616 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க அப்போது குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த எனக்கு உத்தரவிட்டார். பின்னர் அத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பரிசு அறிவித்த கருணாநிதி

பரிசு அறிவித்த கருணாநிதி

அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தலைவர் கலைஞர், ‘இந்தத் திட்டம் முடிய 2 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் ஓராண்டுக்குள் இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நான் வைக்கிறேன். அப்படி ஓராண்டுக்குள் திட்டம் முடிக்கப்பட்டால் என் கையாலேயே அத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிசுகள் வழங்குவேன் என்று சொன்னார். அதை நாங்கள் சவாலாக எடுத்து கொண்டு, அத்துறையில் அமைச்சராக நானும், மற்ற அதிகாரிகளும் ஏறக்குறைய 25 முதல் 30 முறை அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி திட்டத்தை துரிதப்படுத்தி தலைவர் சொன்னதுபோல் ஓராண்டுக்குள் அந்த திட்டத்தை முடித்து அம்மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தோம்.

முடக்குவது, ரத்து செய்வது

முடக்குவது, ரத்து செய்வது

தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையெல்லாம் முடக்குவது, ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளில் அ.தி.மு.க அரசு ஈடுபட்டு வருகிறது. உதராணமாக தலைமைச் செயலகம், ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை சொல்லலாம். இதில் மிகச் சிறந்த நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்று அ.தி.மு.க ஆட்சியில் முடக்கப்பட்டு செயல்பட முடியாத நிலையில் இருக்கிறது.

வேலூருக்குக் கிடைக்கும் பயன்கள்

வேலூருக்குக் கிடைக்கும் பயன்கள்

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளும் பயனடையும். அதாவது வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஒவ்வொருவருக்கும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும். 11 நகராட்சியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் 90 லிட்டர் குடிநீர் கிடைக்கும். 5 பேரூராட்சியிலும் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் 70 லிட்டர் குடிநீர் கிடைக்கும். 944 வழியோர கிராமங்களில் வசிப்போர் ஒவ்வொருவருக்கும் 40 லிட்டர் குடிநீர் கிடைக்கும். இது தான் தி.மு.க. கொண்டு வந்த திட்டம்.

முடக்கி விட்டார்கள்

முடக்கி விட்டார்கள்

ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கியது போலவே இத்திட்டத்தையும் முடக்கினார்கள். 2011 முதல் 2013 வரை இத்திட்டப்பணிகளில் வெறும் 21 சதவீத வேலைகளை மட்டுமே அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இதை தகுந்த ஆதாரத்துடனே நான் சொல்கிறேன். அ.தி.மு.க. அரசின் (2013-14)-க்கான கொள்கை விளக்கக் குறிப்பில், டிமாண்ட் நம்பர் 34-ல் இந்தத் தகவல் இடம்பெற்றிருக்கிறது. இது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை குறிப்பு. அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 21 சதவீதம் மட்டுமே முடிந்திருக்கிறது என்று நான் கூறியதில் ஏதேனும் தவறிருந்தால் என் மீது வழக்கு போடுங்கள் அதை நான் சந்திக்க தயாராகவுள்ளேன்.

நந்தகோபாலும், வீரமணியும்

நந்தகோபாலும், வீரமணியும்

இப்போது தி.மு.க.வின் சார்பில் போராட்டம் என்று அறிவித்தவுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியும், மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகோபாலும் இத்திட்டப் பணிகளை பார்வையிட்டுள்ளார்கள். இந்த ஆட்சித்தலைவர் யாரென்று உங்களுக்கு தெரியும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு தோழன் காரில் அடிபட்டு இறந்திருக்கிறான். மாவட்ட ஆட்சித் தலைவர் தான் கார் ஓட்டி வந்தார் என்று செய்தி வருகிறது. ஆனால், மாவட்ட ஆட்சி தலைவரையும் கைது செய்யவில்லை, கார் ஓட்டி வந்ததாக கூறப்படும் ஓட்டுனரையும் கைது செய்யவில்லை. அதை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வருகிற போது இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்போம். எனவே. இது தண்ணீர் பிரச்சனை. ஆக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணியும், மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகோபாலும் இத்திட்டப் பணிகளை பார்வையிட்டுள்ளார்கள்.

14ம் தேதிக்குள் வந்து விடும்

14ம் தேதிக்குள் வந்து விடும்

"வெள்ளோட்டம் விட்டுப் பார்த்து விட்டோம். திட்டமிட்டபடி மேட்டூர் காவிரி நீர் வருகிற 14-ம் தேதிக்குள் வேலூர் வந்தடையும்" என்று கூறியிருக்கிறார்கள்.
நான் முன்பு அமைச்சராக இருந்த துறை தான் குடிநீர் வழங்கல் துறை. இத்துறையின் சில அதிகாரிகளிடம் பேசி விட்டுத் தான் இங்கே போராட்டத்துக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஏப்ரல் 14-க்குள் தண்ணீர் வரும் சொல்கிறார்களே அது சாத்தியமா என்று கேட்டேன்.

பைப்பே போடலையே

பைப்பே போடலையே

உண்மை நிலவரம் என்னவென்றால் மேட்டூர் அணைக்கு கீழ் உள்ள "தொட்டில்பட்டி" பாயின்டில் இருந்து ராணிப்பேட்டை அருகில் உள்ள பெருமுகை வரை தான் பைப் போடப்பட்டுள்ளது. பெருமுகையிலிருந்து குடிநீர் திட்டப் பணியின் கடைசி பாயின்டான அரக்கோணம் வரை பைப்புகள் இன்னும் போடப்படவில்லை. சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்னும் பைப்லைன் போடப்படவில்லை. அதனால் "தொட்டில்பட்டியில்" பம்ப் செய்த தண்ணீர் பெருமுகையோடு நின்று விட்டது என்ற அதிர்ச்சித் தகவலை அவர்கள் என்னிடத்திலே சொன்னார்கள்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

நான் அவர்களிடம் ஏன் என்று கேட்ட போது அவர்கள் சொன்ன கேள்வி இன்னும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அதாவது அவர்கள் சொன்னார்கள், "பைப் லைன் போடுவதற்கு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமிருந்து இன்னும் அனுமதியே பெறவில்லை" என்று. ஆகவே, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நானும், அண்ணன் துரைமுருகனும், காந்தி எல்லாம் அமர்ந்து பேசி போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.

கலெக்டரா இல்லை மா.செவா

கலெக்டரா இல்லை மா.செவா

தி.மு.க.வின் போராட்ட அறிவிப்பை பார்த்து அஞ்சியே அமைச்சர் இங்கே ஓடி வந்திருக்கிறார். கலெக்டர் ஓடி வந்திருகிறார். வந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அதே போல், அ.தி.மு.க-வினர் எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். தந்தி பேப்பரில், ‘வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 1205 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீரை கொண்டு வந்து தந்திருக்கக்கூடிய மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் கோடி கோடி நன்றி' என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். யார் விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்றால், கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் - வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர், முனைவர் நந்தகோபால் மாவட்ட ஆட்சித்தலைவர் - வேலூர் மாவட்டம் ஆகியோர். இதை அரசு சார்பாக கொடுத்து விட்டு கட்சி சார்பாக கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நந்தகோபால் எங்கிருந்து வந்தார். அவர் மாவட்ட ஆட்சித் தலைவரா இல்லை அ.தி.மு.க-வின் மாவட்ட செயலாளரா?

எந்த ஏப்ரல் மாதம் வரும்

எந்த ஏப்ரல் மாதம் வரும்

மேட்டூர் தொட்டில்பட்டியில் இருந்து வேலூரின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏப்ரல் 14-ஆம் குடிநீர் வரும் என்று சொல்கிறீர்களே எந்த ஏப்ரல் மாதம்?, எந்த ஆண்டு? என்று சொன்னார்களா?, இல்லை. அது எந்த ஏப்ரல் மாதமோ தெரியவில்லை, ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தான் வேலூருக்கு தண்ணீர் வரப்போகிறது.

ஒரு வழக்கு, விசாரணை...

ஒரு வழக்கு, விசாரணை...

எத்தனையோ திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னையில் மேம்பாலங்கள் கட்டினோம். அவற்றில் பெரம்பூர் மேம்பாலப் பணி நின்று போய் விட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது என்று தலைவர் கலைஞரையும், எங்களையும் கைது செய்து வழக்கு போட்டார்கள். ஆனால், அந்த வழக்கின் மீது இதுவரை எப்.ஐ.ஆர் போட்டத்துண்டா? குற்றச்சாட்டு பதிவானதுண்டா? விசாரணை செய்ததுண்டா? இல்லை.

திமுகதான் நிறைவேற்றும்

திமுகதான் நிறைவேற்றும்

தலைவர் கலைஞர் அவர்கள் 2006-ல், தமிழகத்தில் 5-ஆம் முறையாக மீண்டும் முதல்வராக வந்து முடக்கப்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தையும் கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதே போல, இந்த வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டு, பணிகள் நடந்து இடையிலே ஆட்சி மாற்றம் நடந்து, ஜெயலலிதா திட்டத்தைக் கிடப்பில் போட்டு, இப்போது இந்தப் போராட்டத்தை நடத்தி மீண்டும் தி.மு.க ஆட்சி மூலமாக தான் குடிநீர் இந்த மாவட்ட மக்களுக்கு கிடைக்கப் போகிறது.

இதை விட கேடு கெட்ட அரசு எங்காச்சும் உண்டா

இதை விட கேடு கெட்ட அரசு எங்காச்சும் உண்டா

கழகம் ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்களை நிறைவேற்றினோம். உதாரணத்திற்கு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1928 கோடி மதிப்பீட்டில், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் 616 கோடி மதிப்பீட்டில், மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் 784 நாகபட்டினம் கூட்டுக் குடிநீர் திட்டம் 105 கோடி மதிப்பீட்டில், கோவை, திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம் 224 கோடி மதிப்பீட்டில், மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.கவின் 2011 தேர்தல் அறிக்கையில், "வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என்று வாக்குறுதி கொடுத்தார் ஜெயலலிதா. இங்கே நிற்கின்ற யாருக்காவது "20 லிட்டர் தூய்மையான குடிநீர்" கிடைத்ததா? குடிநீரை ஒரு அரசாங்கமே விற்கும் ஒரு கேடு கெட்ட அரசாங்கம் இந்த உலகத்திலே எங்காவது உண்டா ?

தாலிக்கு உத்தரவாதம் இல்லை

தாலிக்கு உத்தரவாதம் இல்லை

அ.தி.மு.க ஆட்சியில் கோடி கோடியாய் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தாய்மார்களின் தாலிக்கு இந்த ஆட்சியில் உத்தரவாதம் இல்லை. அந்த அளவிற்கு வழிப்பறி, கொள்ளை அன்றாடம் நடக்கிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு வழியில்லை. அந்த அளவிற்கு தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. முதியோர் உதவித்தொகை முடங்கியுள்ளது பற்றி சொல்லவே தேவையில்லை.

அதிமுகவை விரட்டியடிப்போம்

அதிமுகவை விரட்டியடிப்போம்

இதில் வேறு முன்கூட்டியே தேர்தலை நடத்தப் போகிறார்களாம். விரைவில் தேர்தலை நடத்துங்கள். தமிழக மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்கனவே தேதி குறித்து விட்டார்கள். மக்கள் விரோத "அ.தி.மு.க. ஆட்சியை விரட்டியடிப்போம்" என்ற ஒரே முழக்கத்துடன் வீறுகொண்டு புறப்படுவோம் சபதமேற்போம். இந்த குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் அடுத்து கட்ட போரட்டாமாக சிறை நிரப்பும் போரட்டம் நடத்தப்படும் என்றார் ஸ்டாலின்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+