
சென்னை டூ தென்காசி! முதலமைச்சராகிய பிறகு முதல்முறையாக ஸ்டாலின் ரயில் பயணம்! குற்றாலத்தில் ஓய்வு!
தென்காசி: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாளை ரயில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் ஸ்டாலின்.
சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி சென்றடையும் அவர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் அன்று மதியம் ராஜபாளையம் செல்கிறார்.

முதல் முறையாக
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். இதன் காரணமாக தென்காசியில் முதல்வருக்கு மிக உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ள அம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதற்காக படை திரட்டி வருகிறார்.

ரயில் பயணம்
வழக்கமாக வெளியூர் பயணங்கள் என்றால் விமானம், கார் என பயணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதல்முறையாக நாளை ரயிலில் தென்காசிக்கு செல்கிறார். சென்னை எழும்பூரில் நாளை இரவு 8.40க்கு பொதிகை ரயிலில் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் காலை 6.30 மணிக்கு தென்காசி சென்றடைகிறார். இதனால் வழியெங்கும் பொதிகை ரயில் நின்று செல்லும் ரயில் நிலையங்களான விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றாலத்தில் ஓய்வு
குற்றாலத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் மட்டும் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதன் பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் ராஜபாளையம் புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார்.

தென் மாவட்ட அமைச்சர்கள்
இதனிடையே முதலமைச்சருடன் இந்த நிகழ்ச்சியில் தென் மாவட்ட அமைச்சர்களான ஐ.பெரியசாமி, மூர்த்தி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகும் நிலையில் இப்போது தான் முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக தென்காசிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.