வெயிலுக்கு விட்டாச்சு பிரேக்.. இந்த 15 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு.. கொட்ட போகுது கோடை மழை!
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெப்பம் அதிகரித்து வந்தாலும் கூட மற்றொரு புறம் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடைக் காலம் தொடங்கிவிட்டாலே இந்தியாவில் பல இடங்களில் வெயில் உச்சத்தைத் தொடும். அதுவும் இந்தாண்டு பிப். மாதமே கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவானது.
இந்தாண்டு கோடைக் கால வெப்பம் என்பது முந்தைய ஆண்டுகளை விட தீவிரமாகவே இருக்கும் என்று ஏற்கனவே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ப வெயில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வெப்பம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் கரூர், நாகை மதுரை மாவட்டங்களில் இயல்பு நிலையில் இருந்து வெப்பம் அதிகமாகவே இருந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. அதிகபட்சமாக போடிநாயக்கனூர், வால்பாறை பகுதிகளில் 40 மிமீ மழை பெய்துள்ளது.
வானிலை எப்படி: வரும் நாட்களைப் பொறுத்தவரைத் தமிழகப் பகுதிகளின் மேல் வழி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 22) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஏப்ரல் 23) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்: ஏப்ரல் 24 மற்றும் ஏப்ரல் 25 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (ஏப்ரல் 22) தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat stress) காரணமாகச் சோர்வு மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications