இடைவிடாத சீரியல்கள்!... சன்டிவியில் மதிய செய்திக்கு மூடுவிழா!!
சன் டிவியில் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரைக்கும் இடைவிடாமல் சீரியல் ஒளிபரப்பாவதால் பிற்பகல் நேர செய்திகள் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டனர்.
சன் டிவி தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் அதாவது 1995 ஆம் ஆண்டுமுதல் பிற்பகல் 1.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் செய்திகள் ஒளிபரப்பானது.
தூர்தர்சன் செய்திகளை மட்டுமே பார்த்து வந்த மக்கள் கேபிள் டிவி வந்த பின்னர் சன்டிவியில் செய்திகளை பார்ப்பதில் ஆர்வம் காட்டினர்.

தனி செய்தி சேனல்
செய்திகளின் தேவையை புரிந்து கொண்ட சன் டிவி நிறுவனம் 2000மாவது ஆண்டில் சன் நியூஸ் என்ற 24 மணி நேர தனி செய்தி சேனலையே தொடங்கியது.

சன் செய்திகள்
தனி செய்தி சேனல் இருந்தாலும் சன் டிவியில் தொடர்ந்து இரண்டு நேரம் செய்திகள் ஒளிபரப்பாகின. இந்த இரண்டு சேனல்களுக்கு இடையே கூட சில நேரங்களில் போட்டி ஏற்படுவது உண்டு.

ஊத்தி மூடப்பட்ட சன் செய்திகள்
சீரியல்களின் வருகை அதிகரித்ததை அடுத்து சன்டிவியில் பிற்பகல் 2 மணிக்கு செய்தி ஒளிபரப்பு நேரம் மாறியது. பின்னர் 2.30 ஆகி தொடர்ந்து 3 மணிக்கு பிற்பகல் செய்தி ஒளிபரப்பானது. ஆனால் 3 மணிக்கும் புதிய சீரியல் ஒளிபரப்ப ஸ்லாட் ஒதுக்கப்படவே கடைசியில் செய்தி ஒளிபரப்புவதையே ஊத்தி மூடிவிட்டனர்.

எத்தனை சீரியல்கள்
சொந்தபந்தம் தொடங்கி பொம்மலாட்டம், தேவதை, மரகதவீணை, பொன்னூஞ்சல், இளவரசி,சந்திரலேகா, கல்யாணப்பரிசு,வள்ளி என பகல் நேரங்களில் சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகின்றன.

இரவு செய்திக்கும் மூடுவிழா?
அதேபோல மாலை நேரத்தில் 6 மணி தொடங்கி இரவு 11 மணிவரை சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. 7 மணிக்கு போனால் போகிறதென்று செய்தி ஒளிபரப்பாகிறது. அதுவும் 10 நிமிடம் சாமி, பேய், திருவிழா என்று சிறப்பு ஸ்டோரி போட்டுவிட்டு பிற செய்திகளை செய்தி சாரலாக படித்துவிடுகின்றன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அந்த அரைமணிநேரத்தையும் ஏதாவது சீரியலுக்கு கொடுத்துவிட்டு இரவு நேர செய்திகளுக்கும் மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications
