ஆமா, எஸ்.வி. சேகர் என்ன இப்படி சொல்றாரே? அண்ணாமலை பற்றி கேட்டதுமே.. வந்து விழுந்த அந்த வார்த்தை.. அட
சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி.சேகர் சமீப காலமாக பகிர்ந்து வரும் டிவிட்டர் பதிவுகள் அண்ணாமலைக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இவருடைய விமர்சனங்கள் சில நேரங்களில் பாஜகவை சேர்ந்தவர்களையே 'அதிருப்தியடைய' வைத்திருக்கிறது. தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை சீரியஸாக சண்டை செய்துகொண்டிருக்கும் நிலையில் பாஜகவை சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு எதிராக சண்டை செய்ய தொடங்கியுள்ளனர். அண்ணாமலைக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் இந்த சண்டையாக உருவாகி இருக்கிறது.

அந்த வகையில் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே அண்ணாமலை மீது விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். அதேபோல எஸ்வி சேகர் பதிவிட்டு வரும் டிவீட்டுகள் அண்ணாமலையை டார்கெட் செய்திருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. அதாவது ஏப்ரல் 14ம் தேதியன்று அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சில புள்ளிவிரங்களை வெளியிட்டார். ஆனால் இந்த தகவல்கள் வெளியான உடனே திமுக தலைவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட தகவல்கள்தான். எனவே இதில் புதியதாக ஏதும் இல்லை என்று பதிலடி கொடுத்தனர். இப்படி இருக்கையில்தான் எஸ்வி சேகரின் பதிவு விவாத பொருளானது. அதாவது, "என்ன பரிட்சை எழுதி என்ன பிரயோஜனம். புக்கை பாத்துதான் எழுதினதா சொன்னாங்க. கடைசீல 10 வருஷ பழைய ஆனந்த விகடன் நக்கீரன் பாத்து எழுதின மாதிரி இருக்கு" என்று சேகர் ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல தன்னுடைய செலவுகளுக்கு நண்பர்கள்தான் உதவி செய்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் 15ம் தேதி எஸ்வி சேகர் தனது ட்விட்டரில், "சட்டம் என்ன சொல்கிறது? ரத்த சம்மந்த உறவுகளை தவிர யார் பணமாக உதவி செய்தாலும் வருமானவரி கட்ட வேண்டும். ஏதாவது பழைய பொருள் வாங்கினாலும் ரூ.19 ஆயிரத்துக்கு மேல் பணமாக குடுக்கக்கூடாது. ரூ.10L x 12=. ₹ 1.2 crores. இதுவே பெரிய ஊழலாஇருக்கே. IT தம்பி இது என்னன்னு விசாரி" என்று எழுதியிருந்தார்.
முன்னதாக செய்தியளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை மாதம் ரூ.8 லட்சம் வரை எனக்கு செலவாகிறது என்று கூறியிருந்தார். இதனையடுத்து எஸ்வி சேகர் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆக இப்படியாக அண்ணாமலையின் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கு பின்னர் எஸ்வி சேகர் பதிவிடும் ட்வீட்டுகள் பேசு பொருளாகி வந்தன. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் இன்று அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,

"நான் ரொம்ப வருஷமா பல பதிவுகளை போட்டுக்கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் இந்த ட்வீட்கள் வேறு யாரையோ சொல்லுவதாக பொருள்பட்டுவிடுகிறது. அப்படி நினைப்பதே தாழ்வு மனப்பான்மையின் அறிகுறிதான். இது குறித்து ஓபான சொல்ல வேண்டும் எனில், எனக்கும் அண்ணாமலைக்கும் எவ்வித விரோதமும் கிடையாது. அவர் என்னைவிட பாதி வயது சிறியவர். எனவே எனக்கு அண்ணாமலையுடன் போட்டி போட வேண்டும் என்கிற அவசியமில்லை.
அப்படி போட்டி போடுவதெனில் அது என்னுடைய பையனுடன் போட்டியிடுவதை போன்றதாகும். நான் பல விஷயங்களில் சாதித்துவிட்டேன். அரசியலில் எந்த தேர்தலிலும் நான் நிற்கபோவதில்லை என்கிற முடிவோடுதான் பாஜகவுக்கு வந்தேன். பிரதமர் நரேந்திர மோடியை பார்த்துதான் பாஜகவுக்கு வந்தேன். அதனால் எனக்கு அந்த பதவி கிடைக்கவில்லை, இந்த பதவி கொடுக்கவில்லை என்பது குறித்த கவலை இல்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications