எதற்கு இந்த சி.எம். செல்?... எத்தனை பேரிடம் ஓடியிருக்கிறார்கள் பாருங்கள் இந்த 3 மாணவிகளும்!
சென்னை: ஒரு புகார் இல்லை, 2 புகார் இல்லை.. ஒவ்வொரு மூலைக்கும் ஓடியிருக்கிறார்கள் அப்பாவி எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள். ஆனால் எங்குமே அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளனர் பயன் இல்லை. உயர்நீதிமன்றப் பதிவாளருக்கும் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதற்கும் ரியாக்ஷன் இல்லை. இப்படி இவர்கள் போகாத இடமே இல்லை.
ஆனால் அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல கண்களையும், காதுகளையும், வாய்களையும் மூடிக் கொண்டு கம்மென்று இருந்து விட்டதால் இன்று 3 அப்பாவி மாணவிகள் அநியாயமாக செத்துப் போயுள்ளனர்.

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது இந்த எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது, மாணவிகளை திட்டித் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தன.

புகார்களுக்கு நடவடிக்கை இல்லை
இதுதொடர்பாக இந்தக் கல்லூரியின் மாணவர்களும், மாணவிகளும் பல்வேறு தரப்பிலும் புகார்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் எங்குமே இவர்களுக்குப் பதில் கிடைக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எத்தனை தவறுகள் பாருங்கள்
இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் மீது இத்தனை தவறுகள் இருந்தும் அவர்களைத் தட்டிக் கேட்க ஒருவர் கூட மாணவிகளுக்காக வரவில்லை என்பதுதான் வேதனையிலும் மிகப் பெரிய வேதனையாக உள்ளது.

அங்கீகாரமே இல்லை
இந்தக் கல்லூரியின் அங்கீகாரத்தை 2008ம் ஆண்டே ரத்து செய்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம். ஆனால் இந்தக் கல்லூரியானது தொடர்ந்து அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பட்டியலில் இருந்து வந்துள்ளது. இது எப்படி என்று தெரியவில்லை.

எம்.ஜி.ஆர். பல்கலையின் குழப்பம்
மேலும் இந்தக் கல்லூரியில் பிஎன்ஒய்எஸ் பட்டப் படிப்பை நடத்த எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எப்படி என்றும் விளங்கவில்லை.

எத்தனை புகார்கள்
இந்தக் கல்லூரி மாணவிகள் பல தரப்பிலும் புகார்கள் கொடுத்துள்ளனர். ஆனால் யாருமே உதவிக்கு வரவில்லையாம். தமிழக போலீஸின் ரகசியப் புலனாய்வுப் பிரிவு, முதல்வரின் தனிப் பிரிவு, சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளருக்குப் புகார் அனுப்பியுள்ளனர். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

கலெக்டர் என்ன செய்கிறார்
மாவட்ட கலெக்டர், தமிழக மனித உரிமை ஆணையம், தேசிய ஆதி திராவிட ஆணையம், இந்திய ஹோமியோபதி மருத்துவத் துறை ஆகியவற்றுக்கு புகார் அனுப்பியுள்ளனர். அங்கும் பதில் கிடைக்கவில்லை.

ஆளுநருக்கும் புகார் மனு
மக்கள் சுகாதாரத் துறை, தமிழக ஆ்தி திராவிட நல இயக்குநரகம், தமிழக சட்டப் பணிகள் துறை, சுங்க வரித்துறை, தமிழக ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் புகார் அனுப்பியுள்ளனர். நடவடிக்கை இல்லை.

மருத்துவ பல்கலைக்கழகமும் அமைதி!
உச்சகட்டமாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்குப் பல புகார்கள் போயும் எட்டிக் கூட பார்க்கவில்லையாம். இன்று அதன் துணைவேந்தர் கீதா லட்சுமி கதை அளக்கிறார் -- பெற்றோர்கள்தான் அங்கீகாரம் இருக்கா, இல்லையான்னு பார்க்கனும் என்று. வந்த புகார்கள் மீது இந்தப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்ததாம்.?

ஊழல் தடுப்புப் பிரிவு
அதேபோல தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு, விழுப்புரம் ஆதி திராவிடர் நல அலுவலகம் ஆகியவற்றுக்கும் புகார்கள் போயும் யாரும் கண்டு கொள்ளவில்லை. மொத்தமாக அத்தனை பேரும் இந்த கல்லூரி மீதான புகார்களைக் கண்டு கொள்ளவில்லை என்பதைப் பார்க்கும்போது லஞ்சம் மிகப் பெரிய அளவில் விளையாடியுள்ளதாகவே ஊகிக்க வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications