நல்லி, போத்தீஸ் கடைகள் "பிராஞ்ச்" துவங்க "லைசென்ஸ்" தரும் தேமுதிக.. வேடிக்கை வினோத தேர்தல் அறிக்கை!!
சென்னை: தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அதில் நம்மைக் கவருவது அதில் உள்ள விநோதமான வாக்குறுதிகள்தான்.
தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் புரட்டிப் பார்த்தால் - சட்டசபையில் ஜெயலலிதா 110ன் கீழ் படித்த அறிவிப்புகளை விட அதிகமான விஷயங்களை போட்டு வைத்துள்ளதை அறிய முடியும்.

அதில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களைப் படித்தபோது அடடா என்று சிரிப்புடன் கூடிய ஆச்சரியம் வருவதை நம்மால் தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட அறிவிப்புகளில் சில..
பிறநாட்டு விவசாய முறைகளை கற்றுக்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 5000 விவசாயிகள் அழைத்து செல்லப்படுவார்கள். ( இது பிராக்டிகலாக சாத்தியமா என்று தெரியவில்லை)
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கும், மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கும், சலுகை கட்டணத்தில் அழைத்து செல்லப்படுவார்கள். (இப்போதே டூர் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்)
தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 45க்கும், டீசல் ரூ. 35 க்கும் விலை நிர்ணயம் செய்யப்படும். (விலை நிர்ணயத்தை மாநில அரசு செய்ய உரிமை இல்லையே!)
நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரிகள் இனிமேல் பாதியாக குறைக்கப்படும். தேவைப்பட்டால் அந்த நிறுவனத்தை தேசிய மயமாக்குவோம். (இதுவும் மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் இல்லாதது)
தமிழகத்தில் அனைத்து தாலுகாவிலும் வணிகவளாகம் தனியாருடன் இணைந்து உருவாக்கப்படும். அதில் 200 முதல் 500 கடைகள் வரை அமைக்கப்படும். அதை வாடகை அல்லது சொந்தமாகவும் வாங்கிகொள்ளலாம். ஒவ்வொரு வளாகத்திலும் மூன்று முதல் ஐந்து திரையரங்குகள் நிறுவப்படும். (கடை கட்டி வாடகைக்கு விட அரசு தேவையா. இது அரசின் வேலையா?)
கூரியர் சேவை, தின்பண்டங்கள் தயாரித்தல், பிஸ்கட், ரொட்டி தயாரித்தல் உள்ளிட்டவற்றில் அரசு ஈடுபடும். (கூரியர் சேவையை நடத்த ஒரு அரசு தேவையா)
நல்லி, போத்தீஸ் போன்ற ஜவுளி கடைகளுக்கு பிற மாநிலங்களில், பிற நாடுகளில் விற்பனை செய்யும் உரிமம் வழங்கப்படும் (அவங்க துணி விக்கிறதுக்கு இதுக்கு எதுக்கு அரசு லைசன்ஸ்...?)
இதுபோல நிறைய காமெடியான அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையில் போடடுத் தாக்கியுள்ளது தேமுதிக.












Click it and Unblock the Notifications