2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.. அதில் பாமக நிச்சயம் இருக்கும்! ஆஹா அன்புமணி சொல்வதை நோட் பண்ணுங்க
ராணிப்பேட்டை: பாமக தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் அரக்கோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026ல் தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றும் அதில் பாமக பங்கு பெறும் என்றும் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குக் கூட்டணி ஆட்சி என்பது கடந்த பல ஆண்டுகளாகவே இருந்தது இல்லை. ஏனென்றால் எம்ஜிஆர் காலம் முதலே நிச்சயம் திமுக அல்லது அதிமுக என எதாவது ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துவிடும்.

தமிழ்நாடு அரசியல்: 2006ம் ஆண்டில் மட்டும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. அப்போது திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த போதிலும், அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு இல்லாமலேயே இருந்தது. மற்ற மாநிலங்களில் கூட்டணியாகப் போட்டியிடும் போது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு தரப்படுகிறது. சமீபத்தில் ஆந்திராவில் கூட இதுவே நடந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் கூட்டணி அரசு என்ற குரல்கள் எழுந்துள்ளன.
அன்புமணி: இதற்கிடையே அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ், 2026 தேர்தல் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் இருக்கும்.. அதில் நிச்சயம் பாமகவும் இருக்கும். இதைத் தான் நான் பல காலமாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறேன்.
கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஆட்சியில் பங்கு பெறும். 2026 தேர்தலுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் இருக்கிறது. அப்போதைய சூழலை வைத்து கூட்டணி முடிவு எடுப்போம். எல்லா கட்சிகளும் இருக்கும் வகையில் கூட்டணி இருக்கும். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்போம்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.
விஜய் மாநாடு: சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தியிருந்தார். தவெக கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அமைத்தால் அதிகாரத்தில் பங்கு இருக்கும் என்று கூறியிருந்தார். இதைக் காங்கிரஸ், விசிக கட்சி நிர்வாகிகள் வரவேற்று இருந்தனர். இந்தச் சூழலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் கிட்டதட்ட அதே கருத்தைக் கூறியிருப்பது கவனிக்க வைப்பதாக இருக்கிறது.
முன்னதாக விஜய் மாநாட்டைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரான வழக்கறிஞர் சரவணன். தங்கள் கட்சிக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications