தாம்பரத்தைத் தாண்டி குஷ்புவுக்கு கண்ணு தெரியாதா?... போட்டுத் தாக்கும் தமிழிசை!
சென்னை: பாஜகவைப் பற்றி பேசி குஷ்பு முகவரி தேடுவதாகத் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ‘தாம்பரத்தை தாண்டி தாமரையை தெரியாது' என பாஜக குறித்து குஷ்பு கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், குஷ்புவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன். இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

இவ்வளவு கிட்டப்பார்வையா ?
தாம்பரத்தை தாண்டி தாமரையை தெரியாது என்று அவர் பேசி இருப்பதன் மூலம் அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது. இவ்வளவு கிட்டப்பார்வை உள்ளவர் என்பது இப்போதுதான் தெரிகிறது.
தாம்பரத்தை தாண்டியும் தாமரை வளர்ந்து இருக்கிறதா? எல்லைகளை கடந்தும் வளர்ந்து வருகிறதா? என்ற அரசியல் நிலவரங்களை அறிந்துக்கொண்டு பேசுவது தான் அவர் பெற்றுள்ள பதவிக்கு மரியாதை.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை :
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் உள்ளது. மேட்டுப்பாளையம் எங்கள் வசம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை... என்று வட இந்தியர்கள் பெருமையுடன் சொல்லும் அளவுக்கு எல்லா இடங்களிலும் கால் பதித்து இருக்கிறோம்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தி.மு.க.வுக்கு இணையான வாக்குகளை பெற்றுள்ளோம். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜனதா வளர்ந்து இருப்பதை, வளர்ந்து வருவதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி பேசி இருப்பர் என்று கருதுகிறேன்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் :
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திராணி இல்லை. போட்டி போடாமல் பயந்து ஓடியவர்கள் அடுத்தவர்களை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை.
ஸ்ரீரங்கத்தில் நடந்த விசயம் நாடறிந்தது. நாங்கள் அந்த தொகுதி நிர்வாகிகளை மட்டுமே வைத்து தேர்தலை சந்தித்து ஊழலுக்கு எதிராக 5 ஆயிரம் வாக்குகளை திரட்டியதை பெருமையாக கருதுகிறோம்.

இது அரசியல் :
இவை எதுவுமே தெரியாமல் நன்றி உணர்ச்சியை காட்டுவதற்கு வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் பேசக்கூடாது. யாரோ எழுதி கொடுத்த வசனத்தை சினிமாவில் பேசலாம். இது அரசியல். இங்கும் எழுதி கொடுத்த வசனத்தை பேசினால் எடுபடாது. மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.
நேற்றுவரை தி.மு.க.வில் இருந்தவர். காங்கிரசுக்கு வந்த உடனேயே அரசியல் வரலாற்றை முழுமையாக கரைத்து குடித்து விட்டாரா?
அவர் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கலாம். ஆனால் பா.ஜனதாவை பற்றி பேசி அரசியல் முகவரி தேடிக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்.
தாம்பரத்தை தாண்டி தெரியாத சின்ன கட்சி பா.ஜனதா என்பது அவரது கணிப்பாக இருந்தால் அந்த சின்ன கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லையே?

டெல்லி தேர்தல் பிரச்சாரம் :
டெல்லியில் மோடி தெருதெருவாக போனாரே மோடி அலை எங்கே போனது என்று கேட்கும் குஷ்பு தானும் டெல்லியில் தெரு தெருவாக சுற்றியதை மறந்து விட்டாரா? மற்றவர்களை பற்றி விமர்சிக்கும் போது தன்னை பற்றியும் நினைத்து பார்த்துக்கொள்ள வேண்டும். கெஜ்ரிவால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டார் என்றோம். இன்று அங்கு நிலைமை என்ன? குடிக்க தண்ணீர் இல்லை. மக்கள் கெஜ்ரிவாலை துரத்தும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
10 மாத பா.ஜனதா ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சொல்லும் குஷ்பு முதலில் 10 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று சொல்லட்டும்.
செல்வமகள் திட்டம், ரூ.2 கட்டினால் 2 லட்சம் ‘இன்சூரன்ஸ்' திட்டம் என்று எத்தனை திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆறு மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை மக்கள் அறிந்துள்ளனர். ஆனால் இவரை போல் அறியாமை உள்ளவர் யாரும் இருக்க முடியாது.
மத ரீதியாக மத மோதல்களை உருவாக்கும் வகையில் பிரித்து பேசும் உணர்வை முதலில் கைவிடுங்கள். பாரதத்தில் எல்லோரும் ஒற்றுமையைத்தான் விரும்புகிறார்கள். ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள். பாரதமே எனது மதம். அரசியல் அமைப்பு சட்டம் தான் எனது புனித நூல் என்று மதங்களை மதிக்கும் பண்புமிக்க தலைவர் கையில் நாடு இருக்கிறது. எனவே குஷ்பு கவலைப்படவும் வேண்டாம். பயப்படவும் வேண்டாம்.

உங்கள் பலம் என்ன ?
எங்களை பற்றி விமர்சிக்கும் குஷ்புவால் தி.மு.க.வை விமர்சிக்க முடியாது. காரணம் இன்னும் பாசம் இழையோடுகிறது. அ.தி.மு.க.வை விமர்சிக்க முடியாது.
பா.ஜனதாவை விமர்சிப்பதற்கு முன்பு உங்கள் பலம் என்ன? எத்தனை லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாவட்ட தலைவர்கள் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள்? வாசன் போய் விட்டார். சிதம்பரம் இருப்பாரா? போவாரா? என்று தெரியவில்லை. இந்த கோஷ்டி அரசியலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதை சரிப்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். ஒரு இடைத்தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா? இல்லை பொதுத்தேர்தலில்தான் தைரியமாக வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்க முடியுமா? என்ற காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரங்களை எல்லாம் கவனியுங்கள்.
சினிமா பிரபலமாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் எப்படியும் பேசலாம் என்று நினைத்து விடாதீர்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications