சட்டசபைத் தேர்தல் பற்றிய ரஜினி 'கருத்து' இதுதான்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து கருத்து கேட்ட நிருபரிடம் வித்தியாசமான பதிலை அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று தெரிவித்திருந்தார்.
அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதன்பிறகு ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின்போதும், ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுவது வாடிக்கை.

எதிர்பார்ப்பு
இன்னும், சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு குரல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏறத்தொடங்கியுள்ளது. எனவே ரஜினியிடம் இக்கேள்வியை கேட்க எப்போதும் நிருபர்கள் தயாராகவே உள்ளனர். அவர்களுக்கு இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஏர்போர்ட்டில் கேள்வி
கபாலி திரைப்பட படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்த ரஜினி இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், தனியார் டிவி நிருபர் ரஜினியை சந்தித்தார். அவர் ரஜினிகாந்த்திடம் சில கேள்விகளை எழுப்பினார். ரஜினி நிற்காமல் நடந்தபடியே பதிலளித்தார்.

விருதால் பெருமை
மத்திய அரசு உங்களுக்கு பத்ம விருது அறிவித்ததுள்ளதே, அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘'மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி'' என்று தெரிவித்தார்.

சரியா கிடைச்சது
விருது காலதாமதமாக கிடைத்ததாக உணர்கிறீர்களா?இல்லை,சரியான நேரத்தில் கிடைத்து விட்டதாக உணர்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘'சரியான நேரத்தில் விருது கிடைத்துள்ளது''என்று பதிலளித்தார்.

நோ கமெண்ட்ஸ்
விருதுகள் விவகாரத்தில் தமிழக கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, ''அதைப் பற்றி பேச விரும்பவில்லை'' என்று ரஜினி கூறினார். மேலும், அங்கிருந்து வேகமாக நகரத் தொடங்கினார்.

ஒன்றுமே நினைக்கலியாம்
அப்போது, கடைசி கேள்வியாக, தமிழக சட்டசபை தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, ''ஒன்றும் நினைக்கவில்லை'' என்று சிரித்தபடியே கூறிவிட்டு காரில் ஏறிச்சென்றார்.

காத்துதான் வருது
இந்த தேர்தல் குறித்து ரஜினி ஒன்றும் நினைக்கவில்லை, நினைக்கப்போவதில்லை என்பதுதான் அவர் வாய்ஸ் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான். எனவேதான், பதில் கேட்டதற்கு 'வெறும் காத்து தான்' வந்துள்ளது.












Click it and Unblock the Notifications