For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காணுமிடமெல்லாம் காக்கி.. அசைவில்லா அரசு.. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, லத்தி ஆட்சியா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மது ஒழிப்பு போராட்டங்களை ஆற்றுப்படுத்துவதற்கு, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையை 'கையாள' வைக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்கிறதா, அல்லது காவல்துறையின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு வந்துள்ளது.

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் நடத்திய சசி பெருமாள் திடீரென உயிரிழந்த நிலையில், அந்த நெருப்பை ஊதி பெரிதாக்கி கலிங்கப்பட்டியில் பற்ற வைத்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

பேச்சேயில்லை

பேச்சேயில்லை

கலிங்கபட்டியில், வைகோ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 'அரசு நிறுவனமான' டாஸ்மாக் அடித்து நொறுக்கப்பட்டது. இது சட்டவிரோதமாகவே இருக்கலாம். இருப்பினும் வைகோவை அழைத்து பேசி, அறவழியில் போராட செய்ய மாவட்ட ஆட்சியர் முயன்றிருக்கலாம். அல்லது சமந்தப்பட்ட துறை அமைச்சர் முயன்றிருக்கலாம். எதுவும் நடக்கவில்லை.

தடியடி, கண்ணீர் புகை

தடியடி, கண்ணீர் புகை

காவல்துறை கடமை உணர்வோடு லத்தியை சுழட்டியது. ஒருபடி மேலேபோய் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்தியது. இதைத்தொடர்ந்துதான், 'நீ ஆம்பளைன்னா என்னை சுடு..' என்று சினிமா பாணியில் போலீசாரை பார்த்து வைகோ அநாகரீக பஞ்ச் டயலாக் பேசும் நிலை உருவானது.

மாணவர்கள் மீதும்

மாணவர்கள் மீதும்

இதையடுத்து சென்னையில் நடந்த சம்பவம் தமிழக போலீசாரின் லத்தி பலத்தை உலகுக்கு மீண்டும் பறைசாற்றியது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், சில மாணவிகளும் இணைந்து திடீரென, அரசு நிறுவனமான டாஸ்மாக் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போதும் காக்கிப்படை அங்கு அணிவகுத்தது. பொதுவாக கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கைவைப்பது மரபு கிடையாது.

மரபை மீறிய போலீஸ்

மரபை மீறிய போலீஸ்

சமூக விரோதிகளை போன்ற தீய நோக்கமும், அரசியல் கட்சியினரை போல ஆதாயம் தேடும் தன்மையும், மாணவர்களிடம் இருப்பதில்லை. உணர்ச்சி வேகத்திலும், உற்சாகமிகுதியிலும்தான் கல்லூரி மாணவர்கள் தவறு செய்வார்கள் என்பதாலும், கல்லூரி மாணவர்கள் மீது கை வைத்தால் மாநிலம் முழுவதும் வலிக்கும் என்பதும், காவல்துறை லத்திசார்ஜ் செய்ய தயங்கும் காரணங்கள். ஆனால், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஃபார்முலா அப்ளையாகவில்லை. அடி வெளுத்துவிட்டனர் போலீசார். மாணவிகளும் தப்பவில்லை.

சங்கிலி அறுப்பு

சங்கிலி அறுப்பு

அத்தோடுவிடுவார்கள் என்று பார்த்தால், நேற்று தேமுதிக நடத்திய மனித சங்கிலியும், தடியடியால் அறுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தை கைது செய்து அழைத்துச் சென்ற பஸ் முன்னால் படுத்து போராட்டம் நடத்திய தொண்டர்களை லத்தி பதம் பார்த்துள்ளது. இங்கும் பெண் தொண்டர்கள், போலீசாரின் பார்வையில் விதிவிலக்கல்ல.

காணும் இடம் எல்லாம் காக்கி

காணும் இடம் எல்லாம் காக்கி

இதுபோன்ற பெரிய போராட்டங்கள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் ஆங்காங்கு, செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்துவோர்களையும் காவல்துறை உடனடியாக கைது செய்து உள்ளே தள்ளியுள்ளது. இதுபோன்ற எந்த போராட்டத்திலும், அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரியும், அமைச்சரும் தலையிடவில்லை. எங்கு காணிணும் காக்கியடா என்று சொல்லுமளவுக்கு போலீசார்தான் அனைத்து பிரச்சினைகளையும் கையாண்டுகொண்டுள்ளனர். ஆம்.. அவர்களின் 'கை'ஆண்டுகொண்டுள்ளது.

திடீர் அமைச்சர்

திடீர் அமைச்சர்

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீரென ஒரு அறிக்கைவிட்டதோடு கடமையை முடித்துக்கொண்டார். ஆக்கப்பூர்வமான எந்த நகர்வுகளும் அரசு தரப்பில் இருந்து வர மறுக்கிறது. காவல்துறையின் லத்தியே போதும், நமது எனர்ஜியை ஏன் வேஸ்ட் செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் நினைத்துவிட்டதை போலத்தான் அவர்களின் அபார மவுனம் உள்ளது.

வைகோ வாயை மூட

வைகோ வாயை மூட

விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையிலும், தீர்வுக்கான முன்னோட்டம் தேடிப்பார்த்தாலும் தெரியவில்லை. பிற கட்சியினர் மீது சேறைவாரி இறைப்பதுதான் அந்த அறிக்கையின் நோக்கம் என்பது நன்கு தெரிந்தது. குறிப்பாக வைகோவை வாயை மூடச் செய்வதே நோக்கமாக இருந்தது.

காட்சிக்கு வரவில்லை

காட்சிக்கு வரவில்லை

அமைச்சர்களோ, முதல்வரோ காட்சிக்கே வராததால், இங்கு காவல்துறையின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற சந்தேகம் சாமானிய மக்களுக்கும் வரத்தொடங்கியுள்ளது. வெளிப்படையாக பெரிய அதிருப்தியை சந்திக்காத அதிமுக ஆட்சிக்கு, இந்த விஷயம் பெரும் பின்னடைவை தரும் என்றே தெரிகிறது.

தேவை நடவடிக்கை

தேவை நடவடிக்கை

அரசு இயந்திரம் செயல்படுவதை காண்பிக்க, ஆக்கப்பூர்வமான வாதத்துக்கோ, நடவடிக்கைக்கோ ஆளும் தரப்பு முன்வர வேண்டும். அப்போதுதான் இங்கு மக்கள் ஆட்சி நடைபெறுவது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும். உலை வாயை மூடலாம், ஊர்வாயை மூட முடியுமா?

English summary
Tamilnadu government deals the anti-Tasmac agitations with police power instead of dialogues and negotiations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X