பொங்கலுக்கு பஸ்கள் இயங்குமா.. இன்று நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை.. அடுத்து என்ன நடக்கும்
சென்னை: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று அமைச்சர் சிவசங்கர் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி என மொத்தம் ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சிஐடியூ தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம் என 23 தொழிற்சங்கத்தினர் இணைந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். பொங்கலுக்கு முன்னதாக இந்த போராட்டத்தை அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலைநிறுத்தம்: இதனால் பொங்கலுக்குப் பேருந்துகள் இயங்குமா.. பொதுமக்களால் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில், வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில், இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் நடந்தால் அது பொதுமக்களுக்கு மிகப் பெரிய சிரமத்தைத் தரும்.
அமைச்சர் சிவசங்கர்: முன்னதாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தொழிற்சங்கம் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றக் கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாகவும் இதனால் ஒரு நாள் அவகாசம் தேவை என்றும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொடர்ந்து நாளை தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த இரு பேச்சுவார்த்தைகளில் சமூக முடிவுகள் எட்டப்பட்டுமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
இன்று பேச்சுவார்த்தை: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடு ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. இதில் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில் மட்டுமே வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லையென்றால் பொங்கலுக்குப் பேருந்துகளே ஓடாது அபாயமும் ஏற்படும்.












Click it and Unblock the Notifications