அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்: வேல்முருகன் அறிவிப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் நடைபெறும் கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஈழம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் அதிமுகவுக்கு ஆதரவு குரல் எழுப்பியபடி இருந்தது தமிழக வாழ்வுரிமை கட்சி. இதையடுத்து அதிமுக கூட்டணியிலேயே சட்டசபை தேர்தலை அக்கட்சி சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கேற்ப, ஜெயலலிதா ஒரு வாரம் முன்பாக, வேல்முருகனை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதேபோல வேறு சில சிறு கட்சிகளின் தலைவர்களுடனும் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக தங்கள் கட்சி மற்றும் தோழமை கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது. இந்த தொகுதி பங்கீட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து வேல்முருகன் தனது அதிர்ச்சியை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று அவர் கூறியது: நான் எனது அதிர்ச்சி குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறி இத்தனை நாட்களான பிறகும், அதிமுக எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.
தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளேன். வரும் 12ம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.
வரும் 12ம் தேதியன்று செவ்வாய்க்கிழமையன்று காலை 10.00 மணிக்கு நெய்வேலி கட்சி அலுவலகம், மாவீரன் வினோத் நினைவரங்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர பொதுக்குழு கூடுகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications