For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?: ஜெ. அரசுக்கு கருணாநிதி கண்டனம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசினர் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வர வேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்க பிரதிநிதிகளை முதல்- அமைச்சரோ, அந்த துறை அமைச்சரோ அழைத்து பேசவில்லை.

Teachers' strike: Karunanidhi condemns ADMK govt.

அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்த பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது. அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதல்-அமைச்சரோடு கலந்து பேசி விட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா?

கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இதுவரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

வேலைநிறுத்த போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளை மேற் கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்து பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் போல இந்த பிரச்சனையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வர வேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has requested the ADMK government to consider JACTO's demands and to put an end to their protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X