தென்காசி தங்கச்சாமிக்கு தங்கமான மனசு.. புளியங்குடி சாலையில் கட்டுகட்டாக பணம்.. அந்த மகிழ்ச்சி தருணம்
தென்காசி: தென்காசியில் நடந்த சம்பவம் ஒன்று, மாவட்ட மக்களுக்கு நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், விவசாயி தங்கச்சாமிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.. என்ன நடந்தது தென்காசி புளியங்குடி சாலையில்?
புளியங்குடி அருகே சாலையில் கிடந்த ரூ.5 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த விவசாயிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். நகைகடன் செலுத்த செல்லும் வழியில் பணத்தை தவற விட்ட வியாபாரியிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கச்சாமி.. 50 வயதாகும் தங்கசாமி ஒரு விவசாயி ஆவார்.. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி ஜோதியுடன், விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
சாலையில் மஞ்சள் கலர் பை
அப்போது சாலையில், மஞ்சள் கலர் பை ஒன்று கேட்பாரற்று விழுந்து கிடந்தது.. இதனால், அந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.5 லட்சம் நோட்டு கட்டு கட்டாக இருப்பதை தங்கச்சாமி கண்டு அதிர்ந்தார்.. யாரோ பணத்தை தவறவிட்டு போயிருக்கிறார்கள் என்பதை அறிந்து, இந்நேரம் பணத்தை பறிகொடுத்தவர்கள் எப்படியெல்லாம் தவித்து கொண்டிருப்பார்களோ? என்று மனம் கலங்கினார்.
அதனால், உரியவரிடம் பணத்தை ஒப்படைத்துவிடலாம் என்று, அந்த பகுதி மக்களிடம் சென்று கேட்டுள்ளார்.. பணத்தை யாராவது பறிகொடுத்தவர்கள் இருக்கிறீர்களா? என்று அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்து விசாரித்தார். ஆனால், யாருமே பணத்தை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.. அதனால் தவறவிட்ட நபர் யார் என்பது உடனடியாக தெரியாததால், ரூ.5 லட்சம் மஞ்சள் பையுடன், புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு மனைவியுடன் சென்றார்..
மலைத்து பார்த்த இன்ஸ்பெக்டர்
இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் விஷயத்தை சொல்லி, 5 லட்சத்தை மஞ்ச பையுடன் ஒப்படைத்தார். விவசாயி தங்கச்சாமியின் நேர்மையை கண்டு மலைத்து போன இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், அவரை வெகுவாக பாராட்டினார். அப்போதுதான் ரூ.5 லட்சத்தை சாலையில் தவறவிட்ட நபர், புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு பதறிப்போய் ஓடிவந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் புளியங்குடி நாட்டாமை அருணாசலம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (44) என்பது தெரியவந்தது..
சொந்தமாக மளிகைக்கடை வைத்திருக்கிறாராம் பாலமுருகன்.. வங்கியில் அடமானம் வைத்திருக்கும் தன்னுடைய நகைகளை மீட்பதற்காக ரூ.5 லட்சத்துடன் சென்றிருக்கிறார்.. பைக்கில் பணத்தை வைத்துக்கொண்டு வங்கிக்கு போகும்போது, பை சாலையில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் ரூ.5 லட்சம் ஒப்படைக்கப்பட்டது.
நெகிழ்ந்து போன பாலமுருகன்
விவசாயி தங்கச்சாமியும், அவரது மனைவியும், சாலையில் கட்டுக்கட்டாக ரூ.5 லட்சத்தைப்பார்த்தும் ஆசைப்படாமல், அதனை உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துக் கொண்ட முயற்சியையும், அவர்களது நேர்மையையும் பாராட்டி இன்ஸ்பெக்டர் தம்பதி இருவருக்குமே சால்வை அணிவித்தார். அதேபோல, ரூ.5 லட்சத்துக்கு உரிமையாளரான பாலமுருகனும், தங்கச்சாமியின் நேர்மையை பாராட்டி பழங்கள் தந்து நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications