2 சமூகத்தினர் இடையே மோதல்: இருந்தை கிராமத்தில் மீண்டும் பதற்றம் - போலீஸ் குவிப்பு
விழுப்புரம்: இரு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருந்தை கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. டிரைவர். அவரது மனைவி மாலதி. அவர்களின் மகள் மல்லிகா (7) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மல்லிகா கெடிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் வீரமணி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலதி வயல் வேலைக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து மல்லிகா தனது தங்கை சுவேதாவுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகதேவ் (20) என்ற வாலிபர் நைசாக வீட்டிற்குள் புகுந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த மல்லிகாவை பல்வேறு கொடுமைப்படுத்தி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மல்லிகாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மகதேவை மடக்கி பிடித்து வீட்டின் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
மேலும் மயங்கி கிடந்த மல்லிகா மற்றும் சுவேதாவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மகதேவை பிடித்து கட்டி வைத்து அடித்தது தவறு என ஒரு தரப்பு வாதிட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் கடந்த 20ம் தேதி நடக்க இருந்தது. ஆனால் குற்றம் செய்த வாலிபருக்கு ஆதரவாக சுமார் 200க்கும் மேற்பட்ட அவரது சமுகத்தை சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக மிரட்டபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் மாலை ஒரு சமூக மக்கள் வாழும் வீடுகளில் புகுந்து பெண்கள் உள்பட பலர் அடித்து மிரட்டப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளார்கள். இது குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். இதனையடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாலிபர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மிகவும் பதற்றமாக இருப்பதால் கைது செய்யப்படவர்களின் விவரத்தை போலீசார் தர தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவிவருவதால் தற்போது இருந்தை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications