சுற்றிவளைத்து கேள்வி கேட்ட கரூர் பெண்கள்- அவசரமாக எஸ்கேப் ஆன அதிமுக எம்.பி தம்பிதுரை
கரூர்: கரூரில் பல நாட்கள் கழித்து தொகுதிக்கு சென்ற அதிமுக எம்.பி தம்பித்துரையை தொகுதி பெண்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்டதால் அங்கிருந்து அவசர அவசரமாக ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தொகுதி அதிமுக எம்.பியான தம்பித்துரை மக்களவை துணை சபாநாயகராக இருக்கிறார். இவர் சில வாரங்களாக கரூர் நகராட்சி வார்டுகளுக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

கரூர் நகராட்சி 1 மற்றும் 2 ஆவது வார்டு பகுதிகளுக்கு நேற்று தம்பித்துரை சென்றார். அப்போது இந்திரா நகர்பகுதி பெண்கள் அவரை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி கேட்டு கோஷங்கள் போட்டனர். "இங்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கழிப்பிட வசதியில்லை. பலமுறை இதுகுறித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை அள்ளுவதில்லை.
தொகுப்பு வீடுகளை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இங்கு அடிப்படை வசதிகள் இல்லை" என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து தம்பிதுரை வேறு பகுதிக்கு சென்றுவிட்டார்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், "தம்பித்துரை எம்பி தொகுதி பக்கமே வந்தது கிடையாது. இப்போதுதான் அவரை பார்க்கிறோம். அடிப்படை வசதிகூட இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்படுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications