The Elephant Whisperers: குட்டி யானை ரகு என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான்! முதுமலை பெள்ளி பூரிப்பு
என் சாப்பாட்டை திருடி ரகு சாப்பிடுவான் என முதுமலையை சேர்ந்த யானை பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்தார்.
ஊட்டி: என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான் இந்த ரகு என தான் வளர்த்த குட்டி யானை குறித்து அதன் பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகள் போன்றவை பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது 20-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வருகிறார்கள். இந்த முகாமில் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாகப் பணிபுரிகிறார்கள்.

கிருஷ்ணகிரி
கடந்த 2017ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயிடம் இருந்து பிரிந்து காயத்துடன் சுற்றித் திரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் குட்டி யானை, முதுகலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு ரகு என பெயர் வைக்கப்பட்டது. அதுபோல் சத்தியமங்கலம் பகுதியில் 2018ஆம் ஆண்டு தாயைப் பிரிந்த மற்றொரு யானை அம்முவும் பராமரிக்கப்படுகிறது.

2 யானை குட்டி
தாயை பிரிந்து தவித்த 2 யானை குட்டிகளைப் பராமரிக்கும் பணியை பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியிடம் ஒப்படைத்தனர். இந்த தம்பதி இரு குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்தனர். அவர்களின் கதையை ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் இரு ஆண்டுகளாக ஆவணப்படமாக்கி இயக்கினார்.

ஆவண குறும்படம்
தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆவண குறும்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த குறும்படம் 95 ஆவது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவுக்கு தேர்வானது. இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படம் வென்றது.

பொம்மன்
இந்த யானைகள் குறித்து பொம்மன் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பக்கத்துல மின்சாரம் தாக்கி இறந்த யானையோட குட்டி, தாயை பிரிந்து தவிக்கிறது என என்னை அழைத்து சென்றார்கள். அப்போது ஊருக்குள்ள வந்த குட்டியை நாய்கள் கடித்ததால் அதற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த 3 மாச குட்டி பிழைப்பதே கஷ்டம் என சொன்னாங்கள். எங்களுக்கு மனசு கேட்கவில்லை. அதனால் அங்கேயே 15 நாட்கள் தங்கி குழந்தை மாதிரி அது கூடவே இருந்து பார்த்து, கொஞ்சம் சரியானதும் முதுமலைக்கு கொண்டு வந்தோம்.

குட்டி பிழைக்காது
குட்டி பிழைக்காதுனு பராமரிக்க யாருமே முன் வரவில்ல. அதனால் நாங்களே பார்த்துகலாம்னு முடிவெடுத்தோம். அந்த குட்டிக்கு ரகு என பேர் வச்சோம். என் மனைவி பெள்ளியும் காட்டு யானைகளை அடைக்கும் மரக்கூண்டான கராலில் தங்கி 24 மணி நேரமும் பார்த்துக்க ஆரம்பித்தோம். காயமெல்லாம் சரியாகி புற்களை சாப்பிட ஆரம்பிச்ச பிறகு எந்த தொந்தரவும் இல்லை. நாங்கள் அத குழந்தை மாதிரிதான் பார்த்துகிட்டோம்.

சினிமா ஷூட்டிங்
அந்த சமயத்தில்தான் கார்த்திகி வந்து சினிமா ஷூட்டிங், அதிகாரிகிட்ட அனுமதி வாங்கிட்டோம்னு சொன்னாங்க. எங்களுக்கு நடிக்கலாம் தெரியாதுனு சொன்னோம். நீங்கள் எப்பவும் போல் இருங்கள் என சொன்னாங்க. எங்க கூடவே இருந்து நாங்கள் செய்யுற வேலைகளை 2 வருஷமா படமாக எடுத்தாங்க என்றார். இதுகுறித்து பெள்ளி கூறுகையில் ரகுவை நாங்கள் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்போதுதான் தாயை பிரிந்த பெண் யானை குட்டியும் வந்தது. அதற்கு அம்மு என பெயர் வைத்து நாங்கள் பார்த்துகிட்டோம்.

சுடுதண்ணீர்
சுடுதண்ணீர் வைத்து குளிக்க வைப்போம். பால் புட்டியில் பால் குடுப்போம். நான் கொடுத்தால்தான் ரகு குடிப்பான். இல்லாவிட்டால் கோபத்தில் அந்த இடத்தை விட்டு போய்விடுவான். மேய்ச்சலுக்கு கூட்டிட்டு சென்றால் மேய்ச்சலின்போது போதும் என நினைத்தால் ரகு திரும்பி வந்து நான் படுத்திருக்கும் இடத்தில் என் கூடவே படுத்திருப்பான். யானை குட்டி குழந்தை மாதிரி. தினந்தோறும் என் பக்கத்தில்தான் படுத்துக் கொள்வார்கள்.

கால் போடுவார்கள்
குழந்தைகளை போல தூக்கத்தில் என் மீது கால் போடுவார்கள், தும்பிக்கையை வைப்பார்கள். ஒரு முறை நான் படுத்திருக்கும் போது வந்த ரகு என் கையை மிதித்து விட்டான். அதில் என் விரலில் காயம் ஏற்பட்டது. இப்படி குழந்தை போல் தெரியாமல் சிறிய சிறிய விஷயங்கள் நடக்கும். ஷாம்பு போட்டு குளிக்க வைப்போம். கராலில் கட்டி வைக்கும் போது யாருமில்லை என்றால் என்னை அழைக்கும். நானும் அதன் குரல் கேட்டு செல்வேன்.

மேய்ச்சலுக்கு சென்றால் சாப்பாடு
மேய்ச்சலுக்கு சென்ற போது நாங்கள் சாப்பிட சாப்பாடு கொண்டு செல்வோம். அப்போது நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்த டிபன் பாக்ஸை ரகு நைசாக திருடி என் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பான். நானும் அதை செல்லமாக திட்டுவேன். தற்போது இருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் வேறு பாகனிடம் ஒப்படைக்கப்பட்டனர். நான் அங்கு போய் அவர்களை தூர இருந்தே பார்ப்பேன். என்னை பார்த்தால் என்னை பிரிந்த ஏக்கம் வந்துவிடும் என்பதால் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு திரும்பி வந்துவிடுவேன். அந்த இரு குட்டிகளையும் பிரிந்தது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என பெள்ளி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications